மின் வினியோகத்தில் தடை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
மின் வினியோகத்தில் தடை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 09, 2026 09:11 PM

பெங்களூரு: 'வானிலை மாற்றம் காரணமாக, மின் வினியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என அதிகாரிகளுக்கு, மின் துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.
'பெஸ்காம்' அலுவலகத்தில் நேற்று மாநிலத்தின் தற்போதைய மின்சார நிலவரம் குறித்து ஆய்வு கூட்டம், மின் துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில் நடந்தது. அனைத்து எஸ்காம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், காணொளி காட்சி மூலம் பங்கேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது:
மழையின்மையால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படலாம். எனவே, மாற்று நடவடிக்கை எடுத்து, தடையில்லாத மின் வினியோகம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களை முறையாக நிர்வகித்து, அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மாநிலத்தில் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரித்து, பயன்படுத்த வேண்டும். மேலும், இணை மின் உற்பத்தி மையத்தில் இருந்து மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மின் மாற்றிகள் சேதம் அடைகின்றன. இதனால் மின் வினியோகத்திலும் தடை ஏற்பட்டு உள்ளது. இதை விரைவில் நிவர்த்தி செய்து, மீண்டும் மின்சாரம் கிடைக்க பணிகளை துரிதப்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கே.பி.டி.சி.எல்., நிர்வாக இயக்குநர் ராம்பிரசாத் மனோகர், பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சிவசங்கர் உட்பட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
