இடம் மாறும் முதல்வர் விஜய் நிகழ்ச்சிகள் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் குழப்பம்
இடம் மாறும் முதல்வர் விஜய் நிகழ்ச்சிகள் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் குழப்பம்
ADDED : செப் 23, 2026 02:39 AM
சென்னை: முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அடிக்கடி இடம் மாறுவதால், அதிகாரிகள் மட்டுமின்றி, த.வெ.க.,வினரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, 'அரசு வெளிப்படைத் தன்மையுடன், லஞ்சம், ஊழலுக்கு இடம் கொடுக்காமல் செயல்படும்' என அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், பல்வேறு தொடர் நடவடிக்கைகளை, தமிழக வெற்றிக்கழக அரசு எடுத்து வருகிறது. சட்டசபை கூட்டம் முடிந்த பின், அரசு திட்ட பணிகளை தொடங்கி வைப்பதில், முதல்வர் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு, காலை உணவு திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், மகளிருக்கான வெற்றி பயணம் திட்டம் போன்றவை தொடங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி பள்ளிக் குழந்தைகளுக்கு, காமராஜர் காலை உணவு வழங்கும் திட்டம், விரிவாக்கத்தை, முதல்வர் விஜய் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை, காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தொடங்க, முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், திடீரென நிகழ்ச்சி சென்னைக்கு மாற்றப்பட்டது.
தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில், வரும் 28ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வந்தன. உசிலம்பட்டி எம்.எல்.ஏ., சட்டசபையில் எழுப்பிய கோரிக்கையை ஏற்று, அங்கு முதல்வர் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இடநெருக்கடி, பாதுகாப்பு காரணங்களை கூறி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையடிவாரத்தில், முதல்வர் விஜய் 25ம் தேதி பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ஆனால், தற்போது தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே, பிரசார பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, முதல்வர் நிகழ்ச்சிகள் அடிக்கடி இடமாறுவதால், அதிகாரிகள் மட்டுமின்றி த.வெ.க.,வினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
