ADDED : செப் 23, 2026 02:38 AM
சென்னை: மத்திய அரசின் 'உடான்' திட்டத்தின் கீழ், 65 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, வேலுார் விமான நிலையம், அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
வேலுாரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள், கடந்த 2017ம் ஆண்டில் தொடங்கப்பட்டன .
நில நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை ஒப்புதலில் ஏற்பட்ட சுணக்கம் போன்ற காரணங்களால், பணிகள் மிகவும் மெத்தனமாக நடந்து வந்தன.
தற்போது ஓடுதளம் மற்றும் வான் பாதுகாப்பிற்கான உரிமம் பெறும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், அடுத்த மாதம், தமிழகத்தில் நடக்க உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார்.
அப்போது, புதிதாக கட்டப்பட்டுள்ள வேலுார் விமான நிலையத்தை, திறந்து வைக்க உள்ளார் என, சிவில் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
