/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னர் பெயரில் நிலம் அதிகாரிகள் விற்பனை?
/
கவர்னர் பெயரில் நிலம் அதிகாரிகள் விற்பனை?
ADDED : ஏப் 05, 2025 02:49 AM
பெலகாவி: கவர்னர் பெயரில் இருந்த 5.50 ஏக்கர் நிலத்தை விற்றதாக, பெலகாவி முன்னாள் கலெக்டர், வருவாய் அதிகாரிகள் மீது ஆர்.டி.ஐ., ஆர்வலர் பீமப்பா காடத் குற்றம் சாட்டியுள்ளார்.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்கல் தாலுகா பெலவதி கிராமத்தை சேர்ந்தவர் இமாம் உசேன். இவருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் இருந்து 6 ஏக்கர் நிலத்தை, கடந்த 2002ம் ஆண்டு கர்நாடக அரசு வாங்கியது. அந்த நிலத்தை அப்போதைய கவர்னர் பெயரில், அரசின் வருவாய் அதிகாரிகள் பதிவு செய்தனர்.
அந்த 6 ஏக்கர் நிலமும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அரசு கூறி இருந்தது. அந்த நிலத்தை ஏதாவது பயன்படுத்த வேண்டும் என்றால், கவர்னரின் அனுமதியை பெற வேண்டும் என்றும் அரசு கூறியது.
இந்நிலையில், 6 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு, வருவாய் அதிகாரிகள் விற்றதாக ஆர்.டி.ஐ., ஆர்வலர் பீமப்பா காடத் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதனால் நிலம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வருவாய் துறையிடம் தகவல் கேட்டார். அவருக்கு கிடைத்த பதிலில், 6 ஏக்கர் நிலத்தில் 5.50 ஏக்கர் நிலத்தை பற்றி, எந்த தகவலும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கவர்னர், அரசுக்கு தெரியாமல் பெலகாவி முன்னாள் கலெக்டர் நிதேஷ் பாட்டீல், பைலஹொங்கல் துணை பிரிவு அதிகாரி சசிதர் பகாலி, நில பதிவேடு துறை துணை இயக்குனர் மோகன் சிவண்ணவர் உள்ளிட்டோர் 5.50 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு விற்று விட்டதாக, பீமப்பா காடத் குற்றம் சாட்டியுள்ளார்.
'தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். துறைரீதியாக விசாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்வேன்' என்றும் பீமப்பா காடத் கூறியுள்ளார்.

