/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளை இழந்த துக்கத்தில் இருந்த தந்தையிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்
/
மகளை இழந்த துக்கத்தில் இருந்த தந்தையிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்
மகளை இழந்த துக்கத்தில் இருந்த தந்தையிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்
மகளை இழந்த துக்கத்தில் இருந்த தந்தையிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்
ADDED : அக் 31, 2025 04:28 AM

பெங்களூரு:  துக்க வீட்டிலும், பெங்களூரு போலீஸ், மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது பற்றி, பி.பி.சி.எல்., முன்னாள் அதிகாரி தன் வேதனையை சமூக வலைதளங்களில் விவரித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பி.பி.சி.எல்., எனப்படும், 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிவகுமார். இவர், 'லிங்க்டுஇன்' சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியிட்ட பதிவு:
என் ஒரே மகளான அக் ஷயா சிவகுமார், 34. பி.டெக்., அறிவியல் மற்றும் எம்.பி.ஏ.,வை, ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் படித்தார்; 11 ஆண்டுகளாக வேலை செய்தார்.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் செப்., 18ம் தேதி இறந்தார். அவரது கண்களை தானம் செய்தேன். பின், நான் சந்தித்த வலிநிறைந்த அனுபவங்களை கூறுகிறேன்.
முரட்டுத்தனம் பெல்லந்துார் கசவனஹள்ளியில் உள்ள வீட்டில் இருந்து கோரமங்களா செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அக் ஷயா உடலை எடுத்துச்செல்ல, ஆம்புலன்ஸ் டிரைவர் என்னிடம் 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் விஷயத்தில் பெல்லந்துார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஒரே மகளை இழந்து நின்ற என்னிடம், அவர் எந்த அனுதாபமும் காட்டவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். உடலை தகனம் செய்ததற்கான ரசீதை பெற பணம் கொடுத்தேன். இறப்பு சான்றிதழ் வாங்க மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தேன். என்னால் பணம் கொடுக்க முடிந்தது. ஏழைகள் என்ன செய்வர்?
இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்.
சஸ்பெண்ட் இந்த பதிவு வேகமாக பரவியதை அடுத்து, மாநில அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்தன. இதனால் தன் பதிவை சிவகுமார் நீக்கினார்.
விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், லஞ்சம் வாங்கிய பெல்லந்துார் போலீஸ் எஸ்.ஐ., சந்தோஷ், கான்ஸ்டபிள் கோரக்நாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
'சிவகுமாரிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தினார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட சிவகுமார் என்னை சந்தித்து, என்ன நடந்தது என்று விளக்க வேண்டும். அவர் தன் பதிவை நீக்கி உள்ளார். அதை நீக்க கூறியது யார் என்பதை கூற வேண்டும்,” என்றார்.
போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறுகையில், “சிவகுமார் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர். அவர் தனக்கு நடந்தது பற்றி, சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கு பதிலாக, லோக் ஆயுக்தாவிடம் புகார் செய்திருக்க வேண்டும்,” என்றார்.

