ADDED : ஏப் 16, 2026 04:00 AM
நெலமங்களா: பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் திருமண வரவேற்பு, ஆடம்பரமாக நடந்தது.
சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடப்பது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098க்கு, தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசாருடன், அதிகாரிகள் திருமண மண்டபத்துக்கு சென்றனர். அப்போது வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.
சிறுமியின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவருக்கு 17 வயது என்பது தெரிந்தது. அவரை விசாரித்த போது, பெற்றோர் தனக்கு பலவந்தமாக திருமணம் நடத்துவதை கூறினார்.
பெற்றோரை கண்டித்த அதிகாரிகள், திருமணத்தை நிறுத்தி, சிறுமியை அரசு காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். அதன்பின் இரண்டு குடும்பத்தினரும், மண்டபத்தில் இருந்து வெளியேறினர்.
அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், பால்ய திருமணங்கள் நடக்கின்றன. எங்களுக்கு தகவல் வந்தால், உடனடியாக அங்கு சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம். பெற்றோருக்கு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் சிறுமியருக்கு திருமணம் நடத்துகின்றனர். சிறுமியரை திருமணம் செய்த நபர் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.
