மின் மாற்றிகளுக்கு ஆயில் மாற்றம்: அமைச்சர் ஜார்ஜ்
மின் மாற்றிகளுக்கு ஆயில் மாற்றம்: அமைச்சர் ஜார்ஜ்
ADDED : ஜூன் 06, 2026 04:02 AM

பெங்களூரு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், மின் தொகுப்பை அதிநவீனமாக்க, கே.பி.டி.சி.எல்., எனும் கர்நாடக மின்சார ஒழுங்கு முறை கழகம் திட்டமிட்டுள்ளது. உயர் அழுத்த மின்மாற்றிகளுகு பயன்படுத்தப்படும் மினரல் ஆயிலுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பயோடிக்ரேடபல் நேச்சுரல் எஸ்டர் ஆயில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் அதிகாரிகளுடன், மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ், நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
தற்போது மாநிலம் முழுதும் மின் தொகுப்பில் செயல்படும், 3,754 மின்மாற்றிகளில், 45 ஹை - கெபாசிடி மின்மாற்றிகள், மினரல் ஆயிலுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, 'பயோ டிக்ரேடபல் நேச்சுரல் எஸ்டர் ஆயில்' மின்மாற்றிகளாக மாற்றப்படும்.
புதிய மின்மாற்றிகள் பொருத்துவதால், பொருளாதார சுமை ஏற்படும். எனவே, 15 ஆண்டுகளுக்கு பழையதான மின்மாற்றிகளை அடையாளம் கண்டு, அவற்றின் ஆயுட்காலம் மற்றும் திறனை அதிகரிக்கும் நோக்கில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எஸ்டர் ஆயில் பயன்படுத்துவதால், பெட்ரோலியம் அடிப்படையிலான ஆயிலால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம். வழக்கமான மினரல் ஆயிலுடன் ஒப்பிட்டால், எஸ்டர் ஆயில் வெப்பத்தன்மையை குறைக்கும் திறன் கொண்டதாகும். அதிகமான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கும் பாதுகாப்பானது. துணை மையங்களின் பணிகளை எளிமையாக்கும்.
ஏற்கனவே சோதனை முறையில், கே.பி.டி.சி.எல்., சார்பில் 45 மின்மாற்றிகளில், நேச்சுரல் எஸ்டர் ஆயில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த மின்மாற்றிகளுக்கு 1,500 லிட்டர் மினரல் ஆயில் பயன்படுத்தப்பட்டது. இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாநிலம் முழுதும், திட்டம் விஸ்தரிக்கப்படும்.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதில், கர்நாடகா எப்போதும் முன்னணியில் உள்ளது. மின் தொகுப்பில் பயோடிக் ரேடபல் நேச்சுரல் எஸ்டர் ஆயில் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் விஷமாவதை தடுக்க கே.பி.டி.சி.எல்., நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கே.பி.டி.சி.எல்., நிர்வாக இயக்குனர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:
வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், நகர்ப்புற மின் தேவைக்கு தகுந்தபடி, மின்சாரத்தை வினியோகிக்கும் நோக்கில், நாங்கள் மின் தொகுப்பை வேகமாக விஸ்தரிக்கிறோம். 15ஆண்டுகளுக்கும் அதிக பழமையான மின்மாற்றிகளுக்கு, நேச்சுரல் எஸ்டர் ஆயில் பயன்படுத்தப்படும்.
குறைந்த செலவில், மின்மாற்றிகளின் திறனை அதிகரிப்பதுடன், இவற்றின் ஆயுட்காலமும் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, மின் வினியோகத்திலும் மாற்றம் கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
