/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நில பிரச்னையால் பகை முதியவர் வெட்டி கொலை
/
நில பிரச்னையால் பகை முதியவர் வெட்டி கொலை
ADDED : மே 04, 2025 11:30 PM

சிக்கபல்லாபூர்: நில பிரச்னை காரணமாக, வீட்டிற்குள் நுழைந்து, 60 வயது முதியவரை கொன்றவர், போலீசில் சரணடைந்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், பொஷிட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி நரசப்பா, 60. கர்நாடக மின் பகிர்மான கார்ப்பரேஷனில் கான்ட்ராக்டராக இருந்தார்.
நேற்று காலை இவரின் வீட்டுக்குள் புகுந்த நபர், லட்சுமி நரசப்பாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதை தடுக்க முயற்சித்த குடும்பத்தினரையும் தாக்கினார். படுகாயம் அடைந்த லட்சுமி நரசப்பா, உயிரிழந்தார். இது குறித்து சிக்கபல்லாபூர் ரூரல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை செய்த நபர், எங்கும் செல்லாமல், அங்கு வந்த போலீசில் சரணடைந்தார்.
முதல்கட்ட விசாரணையில், லட்சுமி நரசப்பாவை, அதே கிராமத்தை சேர்ந்த நந்திஷ் கொலை செய்தது தெரியவந்தது. இவ்விரு குடும்பத்தினருக்கும் கிராமத்தில் உள்ள நில பிரச்னை தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
நீண்ட நாட்களாக நில பிரச்னை முடியாமல் இருந்ததால், நேற்று காலை லட்சுமி நரசப்பா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
போலீசார் விசாரிக்கின்றனர்.