பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு விரைவில் அமல் என ஓம் பிர்லா உறுதி
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு விரைவில் அமல் என ஓம் பிர்லா உறுதி
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 11:22 PM

பெங்களூரு: ‘‘பெண்களுக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும்,’’ என, காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மாநாட்டில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.
இரண்டு நாட்கள் நடக்கும் காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் மாநாடு, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கில் நேற்று துவங்கியது.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் இந்திய மண்டல பிரிவு தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். லோக்சபா, சட்டசபையில் இருப்பது போன்றே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. பல மாநிலங்களின் பெண் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
ஜனநாயக வெற்றி
ஓம் பிர்லா பேசியதாவது:
நவீன இந்தியாவில் ராணுவம், விண்வெளி உட்பட அனைத்து துறையிலும் பெண்கள் வெற்றி பெற்று உள்ளனர். நாட்டை பாதுகாக்க எல்லையில் பணியாற்றுகின்றனர். சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்கு அரசு வசதிகள் கிடைக்க வேண்டும். லோக்சபா, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான, 33 சதவீத இடஒதுக்கீடு விரைவில் அமல்படுத்தப்படும்.
அரசியலில் பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. பஞ்சாயத்து முதல் லோக்சபா வரை அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தால் மட்டுமே ஜனநாயகம் வெற்றி பெறும்.
டிஜிட்டல் உலகில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், ஜனநாயகத்தில் அவர்கள் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்க வேண்டும். மாறுபட்ட கருத்து, அபிப்ராயங்களை பரிமாறி கொள்வதே ஜனநாயகத்தின் பலம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறகில்லாத பறவை
முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
டிசம்பரில் நடக்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடர் சரித்திரம் படைக்கும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு நாட்டின் ஜனநாயக அமைப்பில் மாற்றம் கொண்டு வரும். பெண்களை மதிப்பது நமது கடமை. பெண்கள் ஆதரவின்றி ஆண்களால் வெற்றி பெற முடியாது. பெண்கள் இல்லாத ஜனநாயகம் சிறகில்லாத பறவை போன்றது.
அரசு பதவிக்கு பெண்கள் தேர்வான பின், தங்கள் கணவர், வாரிசுகளை அதிகாரத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பெண்கள் அரசியலுக்கு வருவது எளிதல்ல. சமூகம், குடும்ப ரீதியாக பல சவால்கள் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் பரமேஸ்வர், காமன்வெல்த் மகளிர் பார்லிமென்ட் உறுப்பினர்கள் இந்திய மண்டல பிரிவு தலைவர் புரந்தேஸ்வரி, கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் உள்ளிட்டோரும், இடஒதுக்கீடு பற்றியும், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பேசினர்.
