UPDATED : அக் 07, 2026 12:00 AM
ADDED : அக் 06, 2026 10:36 PM

பெங்களூரு: ‘‘ஆசிய போட்டியில் தங்கம் வென்ற, கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்,’’ என, முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற, நம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை பூவம்மா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் உட்பட எட்டு பேரையும், பெங்களூரு விதான் சவுதாவுக்கு நேற்று நேரில் அழைத்து, முதல்வர் சிவகுமார் நேற்று கவுரவித்தார்.
விளையாட்டு வீரர்கள், தங்கள் அனுபவங்களை சிவகுமாரிடம் பகிர்ந்தனர்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஆசிய போட்டியில் தங்கம் வென்றால், 35 லட்சம் ரூபாய்; வெள்ளி வென்றால் 25 லட்சம் ரூபாய்; வெண்கலம் வென்றால் 15 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக மாநில அரசு வழங்கி வந்தது. இந்த தொகை உயர்த்தப்படுகிறது. தற்போது, தங்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்; வெள்ளி வென்றவர்களுக்கு 75 லட்சம் ரூபாய்; வெண்கலம் வென்றவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
நடந்து முடிந்த ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற எட்டு பேருக்கும், உயர்த்தப்பட்ட தொகையே வழங்கப்படும்.
முதன் முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற நமது மாநிலத்தை சேர்ந்த, 20 பேருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், அரசு பணிகளில் நேரடியாக நியமிக்கப்படுவர். மாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு உண்டு.
‘இலக்கு ஒலிம்பிக்’ திட்டத்தின் கீழ், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில், பூவம்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஷில்பா ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
