பைக் சாகசம் செய்தவர்களால் வேனில் சென்ற ஒருவர் பலி
பைக் சாகசம் செய்தவர்களால் வேனில் சென்ற ஒருவர் பலி
ADDED : செப் 20, 2026 11:15 PM
பெங்களூரு: சாலையில், 'பைக் வீலிங்' சாகசம் செய்தவர்களால், 'டிராவலர் டெம்போ' விபத்துக்குள்ளாகி, ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயமடைந்தனர்.
பெங்களூரு, அன்னபூர்னேஸ்வரி நகரின், வெளி வட்ட சாலையில், மஹாதேஸ்வரா கோவில் அருகில், நேற்று அதிகாலை டிராவலர் டெம்போ, ஏழு பயணியருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் சிலர், வீலிங் சாகசம் எனும், பைக் முன் சக்கரத்தை துாக்கி ஓட்டியபடி வேகமாக வந்தனர்.
திடீரென அவர்கள் குறுக்கே வந்ததால், டிராவலர் டெம்போ ஓட்டுநர், அந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, மின் கம்பம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மனோஜ், 27, என்ற பயணி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர், லக்கரேவை சேர்ந்தவர். ஐவர் காயமடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சாலையில் இளைஞர்கள், பைக் வீலிங் செய்து மற்றவர்களின் உயிரோடு விளையாடுகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, ஞானபாரதி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.
