பா.ஜ., பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையில் மேலும் ஒருவர் கைது
பா.ஜ., பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஆக 06, 2026 11:37 PM

பெங்களூரு: பா.ஜ., பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தட்சிண கன்னடாவின் சுள்ளியா தாலுகா பெல்லாரே கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார், 27. பா.ஜ., பிரமுகர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் உறுப்பினர்களுக்கு, கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்ததால், கொலை வழக்கை என்.ஐ.ஏ., தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கிறது.
ஏற்கனவே, 22 பேரை கைது செய்திருந்த நிலையில், கடந்த மாதம் கேரளா, தமிழகத்தில் பதுங்கியிருந்த அப்துல் நசீர், நவுசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, கேரளாவின் கொச்சியில் பதுங்கியிருந்த உமர் பாரூக் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை பெங்களூருக்கு அழைத்து விசாரிக்கின்றனர்.
பிரவீன் நெட்டார் கொலையாளிகள் தப்பித்து செல்ல, உமர் பாரூக் தான் வாகனம் கொடுத்து உதவியிருந்தார். வழக்கில், அவர் 13வது குற்றவாளி ஆவார். நான்கு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவரை பற்றி, என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைக்கவில்லை.
அவரை பற்றி தகவல் கொடுப்போருக்கு, 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. உமர் பாரூக்கிற்கு எதிராக 'ரெட் கார்னர்' நோட்டீஸ், பிடிவாரன்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் இன்னும், இருவரை, என்.ஐ.ஏ., கைது செய்ய வேண்டியுள்ளது.
