வரும் 14ல் பதவி ராஜினாமா மேல்சபை தலைவர் பசவராஜ் அறிவிப்பு
வரும் 14ல் பதவி ராஜினாமா மேல்சபை தலைவர் பசவராஜ் அறிவிப்பு
ADDED : ஆக 06, 2026 11:38 PM

பெங்களூரு: ''வரும், 14ம் தேதி என் பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சமீபத்தில் முதல்வர் சிவகுமார் தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. யார் யாருக்கு அமைச்சர் பதவி என்ற தகவலை, காங்கிரஸ் மேலிடம் அறிவித்திருந்தது.
அத்துடன், கர்நாடக வரலாற்றில், முதன் முறையாக, சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர், மேல்சபை தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான பெயரையும் அறிவித்திருந்தது.
அதில், மேல்சபை தலைவராக சலீம் அகமது, துணைத்தலைவராக உமாஸ்ரீ ஆகியோரின் பெயர் குறிப்பிட்டிருந்தது.
இதனால் தற்போதைய மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், 'ஹொரட்டி பதவி விலகவில்லை என்றால், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, காங்கிரஸ் முடிவு செய்திருந்தது.
இத்தகவலை, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்தும், நேற்று அவரை சந்தித்து தெரிவித்தார்.
இதையடுத்து, விதான் சவுதாவில் நேற்று பசவராஜ் ஹொரட்டி அளித்த பேட்டி:
முதல்வர் சிவகுமார், என்னை இரண்டு முறை அழைத்து, ராஜினாமா செய்யும்படி கூறினார். தற்போது என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதால், எந்தவிதமான சங்கடத்தையும் சந்திக்க விரும்பவில்லை.
என் மீது ஊழல் அல்லது முறைகேடு குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், இச்செயல் எனக்கு வேதனை அளிக்கிறது.
எனவே, நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ஆக., 14ம் தேதி மழைகால கூட்டத்தொடருக்காக கூடும் அவைக்கு இது குறித்து தெரிவிப்பேன். அதன் பின், அப்பதவியில் இருந்து விலகுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேல்சபை எதிர்க் கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் ராஜினாமா கோருவது சரியான நடவடிக்கை அல்ல. இது குறித்து இறுதி முடிவை மேல்சபை தலைவர் எடுக்க வேண்டும். பசவராஜ் ஹொரட்டி இதற்கு எதிராக உறுதியாக நின்றால், அவருக்கு பா.ஜ., முழு ஆதரவு வழங்கும்,'' என்றார்.
ம.ஜ.த., தலைவர் சுரேஷ் பாபு கூறுகையில், ''காங்கிரசின் இச்செயல் அதிருப்தி அளிக்கிறது. எட்டு முறை எம்.எல்.சி.,யாக பணியாற்றிய பசவராஜ் ஹொரட்டி போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு, இத்தகைய நிலை ஏற்படக்கூடாது,'' என்றார்.
