யுத்தத்துக்கு தயாராக இருக்க வேண்டும் இம்மடி சித்தேஸ்வர சுவாமிகள் கருத்து
யுத்தத்துக்கு தயாராக இருக்க வேண்டும் இம்மடி சித்தேஸ்வர சுவாமிகள் கருத்து
ADDED : மே 02, 2025 11:30 PM

கோலார்: ''பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, யுத்தம் நடத்துவது கட்டாயம். இந்த நேரத்தில் அமைதியை போதிப்பது சரியல்ல,'' என சித்ரதுர்காவின் கோவி குருபீடத்தின் இம்மடி சித்தராமேஸ்வர சுவாமிகள் தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உங்கள் வீட்டுக்கு பயங்கரவாதிகள் வந்தாலும், அமைதியை போதிப்பீர்களா? நீங்கள் அமைதியை போதிப்பதானால், நானும் போதிக்கிறேன். பயங்கரவாதிகளின் கையில் இருந்து, துப்பாக்கியை பறித்து, அவர்களை சுட்டு கொன்றால், நானும் அதையே செய்வேன்.
எல்லையில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், நாட்டுக்குள் ஊடுருவ கூடாது என்றால், தக்க பதிலடி கொடுக்க நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நமது வீட்டில் பிரச்னை ஏற்பட்டால்தான், பிரச்னையின் தீவிரம் புரியும்.
பயங்கரவாதிகளை ஒடுக்க, யுத்தம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒருவருக்கு புத்தி வர வேண்டுமானால், சாட்டையடி கொடுக்க வேண்டும்.
இது நமது தர்மத்தின் சித்தாந்தமும் கூட. இந்தியா அமைதி, புரட்சி என இரண்டுக்கும் தயாராக உள்ளது என்பதை, உலகுக்கு காட்ட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும்.
எதிராளியின் சக்தி, திறனை கவனித்து நாமும் திட்டம் வகுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு அழகான நாட்கள் கிடைக்க வேண்டுமானால், நாம் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும். தர்மத்தை காப்பாற்ற, நாமும் புரட்சி செய்தாக வேண்டும்.
நாமும் கூட அமைதி துாதர்கள் தான். ஆனால் நமது வீட்டில் தாய், சகோதரி, மருமகளை யாராவது தாக்கினால், அமைதியாக இருக்க முடியாது. அப்போது நாமும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டும். பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
