சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால் தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்: மோடி
சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால் தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்: மோடி
ADDED : மே 11, 2026 02:38 AM

பெங்களூரு: ''சமூக அக்கறை கொண்ட இளைஞர் களால் தான், வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பெங்களூரு கனகபுரா சாலையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் சர்வதேச வாழும் கலை அமைப்பின், 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடந்தது.
தாமரை குடை இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, வாழும் கலை அமைப்பின் மைய வளாகத்தின், குருகுலா பகுதியில் உள்ள பஞ்ச முக விநாயகர் சிலையை வணங்கி, புதிதாக கட்டப்பட்டு உள்ள தியான மையத்தையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
சர்வதேச வாழும் கலை அமைப்பின் பிரமாண்ட தியான மையத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. நோக்கம் தெளிவாக இருந்து சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் பணிகள், நேர் மறையான பலன்களை தரும்.
நாம் அனைவரும் தாமரை குடையின் கீழ் உள்ளோம். இந்த தாமரை, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.
உலக அளவில் இந்தியாவின் கலாசாரம், ஆன்மிக அடையாளத்தை வலுப் படுத்துவதில் பெங்களூரு முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு உள்ள சூழல் சிறப்பானது.
இந்தியாவின் கலாசார அடையாளம், ஆன்மிகம், ஆன்மிக உணர்வுக்கு புதிய உயரங்களை கொடுத்து உள்ளது. வெளிநாட்டினரும், இந்தியாவின் ஆன்மிக விழுமியங்களால் ஈர்க்கப்படுகின்றனர். நமது நாடு பன்முக தன்மை கொண்டது. இதன் சாராம்சம் மற்றவர்களுக்காக வாழ்வதே ஆகும்.
உலகளாவிய தலைவர் சர்வதேச வாழும் கலை அமைப்பும் சமூகத்தின் ஆற்றலை தன் மீது சுமந்து செல்கிறது. நாம் இளைஞர்கள் ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் நிகழ்ந்து வருகின்றன.
நாம் பல துறைகளில் முன்னணியில் உள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனை உலகளாவிய தலைவராக உருவெடுத்து உள்ளது. உள்கட்டமைப்பு, புத்தொழில் சூழலமைப்பிலும் முன்னணியில் இருக்கிறோம்.
அனைத்து மட்டங்களிலும் முன்னேற நமக்கு கூட்டு முயற்சி தேவை. நாட்டின் முன் உள்ள சவால்கள் கூட்டாக சேர்ந்து தீர்க்க வேண்டும். சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால் தான் வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும்.
நமது பூமி அன்னையை ரசாயன உரங்கள் அழித்து வருகின்றன. பூமி அன்னையை பாதுகாப்பதில் பிரசாரம் செய்வதிலும் சர்வதேச வாழும் கலை மையம் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
யோகாவுக்கு அந்தஸ்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தலைசிறந்த தலைவர். உலகின் உன்னத நண்பர். வசுதைவ குடும்பகம் என்ற முழக்கத்தின் மூலம் இந்தியாவை புதிய நிலைக்கு கொண்டு சென்று உள்ளார்.
முன்னர் நாம் பாதுகாப்பாற்றவர்களாக உணர்ந்தோம். இப்போது அப்படி இல்லை. பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
ஒரு காலத்தில் மற்ற நாடுகளி டம் கேட்கும் நிலையில் இருந்தோம். இப்போது மற்ற நாடுகளுக்கு கொடுக்கும் நிலையில் இருக்கிறோம். பொருளாதார நிலையில் நம் நாட் டை, 3வது இடத்திற்கு கொண்டு வந்து உள்ளார்.
ஸ்ரீராமர் அயோத்தியில் கூடாரத்தில் வசித்தார். அங்கு கோவில் கட்ட இருந்த அனைத்து பிரச்னைகளும் நீங்கி ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. காசிக்கு பிரதமர் பெருமை சேர்த்து உள்ளார். யோகாவிற்கு அந்தஸ்து வழங்கி உள்ளார். நமது நாட்டை முன்னணியை நோக்கி கொண்டு செல்ல, பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
