/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.10 கோடியில் பாலம் இணைப்பு சாலை திறப்பு 60 ஆண்டு கால கனவு நனவானது
/
ரூ.10 கோடியில் பாலம் இணைப்பு சாலை திறப்பு 60 ஆண்டு கால கனவு நனவானது
ரூ.10 கோடியில் பாலம் இணைப்பு சாலை திறப்பு 60 ஆண்டு கால கனவு நனவானது
ரூ.10 கோடியில் பாலம் இணைப்பு சாலை திறப்பு 60 ஆண்டு கால கனவு நனவானது
ADDED : அக் 09, 2025 04:18 AM

தங்கவயல், : தங்கவயலின் டி.கொள்ளஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லுார் கிராமத்தில் இருந்து பேத்தமங்களா இடையே பாலாறு பாயும் இடத்தில், 10 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 60 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளது.
டி. கொள்ளஹள்ளி, நல்லுார் கிராமத்தில் இருந்து பேத்தமங்களா செல்ல, 60 அடி கால்வாயை கடக்க முடியாமல் கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனால் மேம்பாலம் கட்ட வேண்டுமென, 60 ஆண்டுகளாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பலனாக, மேம்பாலம் கட்டவும், 5 கி.மீ., இணைப்பு சாலை ஏற்படுத்தவும் மாநில அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில், 6 கோடியில் மேம்பாலமும், 4 கோடியில் இணைப்புச் சாலையும் ஏற்படுத்தப்பட்டது.
இவற்றன் திறப்பு விழா தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று நடந்தது. மேம்பாலத்தை, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்க்கிஹோளி திறந்து வைத்து பேசியதாவது:
மாநிலத்தில் அவசியம் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. பாலாறு செல்லும் பாதையில் மேம்பாலம் அவசியம் தேவை என்பதை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று இப்பகுதி மக்களின் கனவு நனவாகிவிட்டது. இந்த மேம்பாலத்தால், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், உணவுத் துறை அமைச்சர் முனியப்பா, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
-இந்த மேம்பாலம் வழியாக செல்லும் 5 கி.மீ., இணைப்பு சாலை கேசம்பள்ளி, வி.கோட்டா, முல்பாகல், கோலார் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்ல மிக பயனுள்ளதாக இருக்கும்.
மாநில அரசு மீட்கும்! தங்கவயலில் 12 ஆயிரம் ஏக்கர் காலி நிலம் உள்ளது. இதில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தலாம். இது மத்திய அரசிடம் உள்ளது. அதை மாநில அரசு மீட்க வேண்டும். ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நான் பதவியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எம்.பி.,களான சுதாகர், மல்லேஸ்பாபு ஆகியோர் நிறைவேற்ற வேண்டும். -முனியப்பா, மாநில அமைச்சர், உணவுத் துறை