பெங்., உலக திருக்குறள் மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வாய்ப்பு
பெங்., உலக திருக்குறள் மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பிக்க வாய்ப்பு
ADDED : ஏப் 20, 2026 02:17 AM
பெங்களூரு: தமிழ் மக்களே... நீங்கள் விரும்பும் தமிழ் தொடர்பான கட்டுரைகளை சமர்ப்பிக்க தயாராக உள்ளீர்களா... உங்களுக்காகவே உலக திருக்குறள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
பெங்களூரு சாந்திநகர் டபுள் ரோட்டில் உள்ள புனித வளனார் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், பெங்களூரு தாய்மொழி கூட்டமைப்பு இணைந்து ஜூலை 5 ம் தேதி, புனித வளனார் பல்கலையில் 7 வது உலக திருக்குறள் மாநாட்டை நடத்த உள்ளனர்.
கட்டுரை தலைப்பு 'திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும், மாந்த நேய மாண்புகளும்' என்ற தலைப்பில் கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம். துணை தலைப்புகளாக போரில்லா நல்லுலகம்; பகைத்திறம் தெளிதல்; நாட்டின் பாதுகாப்பு நெறிகள்; நாடுகளின் நட்புறவு; நல்லிணக்கம் பேணல்; உள்நாட்டு அமைதி; உலக அமைதியும் மக்கள் நலமும்; உலக அமைதியும் மாந்த வளமும்; தன்முனைப்பு இல்லா தலைமை; நாடென்ப நாடா வளத்தன; பொருளாதார மேம்பாடு; உலக அமைதிக்கு துாதர்களின் பங்களிப்பு; உலக அமைதிக்கு ஒற்றர்களின் பங்கு.
தனிமனித அமைதியும், சமூக அமைதியும்; அன்பு நெறியே அமைதி நெறி; ஒப்புரவு நெறிகள்; சான்றாண்மை பண்புகள்; சமநீதி கோட்பாடுகள்; கண்ணோட்ட விழுமியம்; உலக அமைதியின் வித்தே குடும்ப நலம்; கல்வியின் நேர்மை; ஆளுமையின் மாண்புகள்; ஒழுக்கம் போற்றுதல்; பண்புடமையின் மாண்புகள்; உறவுகளின் மேன்மை என 25 துணை தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கலாம். அரசியல், மதம், ஜாதி கலப்பு இல்லாமல் உலக அமைதி, மாந்த நேய அடிப்படையில் மட்டுமே கட்டுரைகள் இருக்க வேண்டும். சொந்த படைப்பாக இருப்பது முக்கியம்.
12 புள்ளியில், 1.5 இடைவெளியில் யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து வேர்ட் டாக்குமெண்ட், பி.டி.எப்., ஆகவும் அனுப்ப வேண்டும். ஏழு பக்கங்களில் கட்டுரை இருக்க வேண்டும். ஆய்வு நெறிமுறைப்படி இருக்க வேண்டும். கட்டுரை அனுப்புபவரின் தனிப்பட்ட தகவல், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை தனி தனியாக குறிப்பிட வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி கட்டுரைகளை சுருக்குவதற்கும், திருத்துவதற்கும் திருக்குறள் மாநாடு குழுவினருக்கு உரிமை உள்ளது. ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்க தமிழ் சான்றோர்கள் தலைமையில் சேரன், சோழன், பாண்டியர் என்ற முப்பிரிவு அரங்கில் வாய்ப்பு அளிக்கப்படும். கட்டுரைகளை மே மாதம் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒருவர் ஒரு தலைப்பில் மட்டுமே கட்டுரை அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளை 7thirukural.conference@office.sju.edu.in, sarala.v@sju.edu.in, sdkumar1956@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
