sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சாதனை மாநாடு நடத்தும் காங்., அரசு மீது எதிர்க்கட்சிகள்... பாய்ச்சல்! மழையால் மக்கள் படும் அவதியில் அவசியமா என காட்டம்

/

சாதனை மாநாடு நடத்தும் காங்., அரசு மீது எதிர்க்கட்சிகள்... பாய்ச்சல்! மழையால் மக்கள் படும் அவதியில் அவசியமா என காட்டம்

சாதனை மாநாடு நடத்தும் காங்., அரசு மீது எதிர்க்கட்சிகள்... பாய்ச்சல்! மழையால் மக்கள் படும் அவதியில் அவசியமா என காட்டம்

சாதனை மாநாடு நடத்தும் காங்., அரசு மீது எதிர்க்கட்சிகள்... பாய்ச்சல்! மழையால் மக்கள் படும் அவதியில் அவசியமா என காட்டம்


ADDED : மே 20, 2025 12:01 AM

Google News

ADDED : மே 20, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,: ''மழையால் பெங்களூரு மிதக்கிறது. குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல், காங்கிரஸ் அரசின் இரண்டு ஆண்டு சாதனை மாநாடு அவசியமா' என, எதிர்க்கட்சிகள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளன.

பெங்களூரில் சில நாட்களாக, கனமழை பெய்கிறது. முக்கியமான வர்த்தக பகுதியான எலக்ட்ரானிக் சிட்டி, சாயி லே - அவுட் உட்பட, பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன. சாக்கடைகள் நிரம்பி குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாலைகளா அல்லது ஏரிகளா என்ற குழம்பும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளம் எங்குள்ளது என தெரியாமல், வாகன பயணியர், உயிரை கையில் பிடித்தபடி செல்கின்றனர்.

மழைக்காலத்துக்கு முன்பே, பெங்களூருக்கு இத்தகைய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்தால் என்ன கதியாகும் என, மக்கள் அஞ்சுகின்றனர். மழைக்காலத்தை எதிர்க்கொள்ள பெங்களூரு மாநகராட்சியோ அல்லது மாநில அரசோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இது போன்ற சூழ்நிலையில், மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய மாநில அரசு, இரண்டாண்டு சாதனை மாநாடு நடத்துவதில், அதிக அக்கறை காட்டுவதால், எதிர்க்கட்சியினர் கோபமடைந்துள்ளனர். மக்களை பாதுகாப்பதை விட, சாதனை மாநாடு நடத்துவது முக்கியமா என, கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

ஒரே ஒரு மழைக்கு, காங்கிரஸ் அரசின் 'பிராண்ட் பெங்களூரு' சாயம் வெளுத்துள்ளது. நேற்று (முன்தினம்) முழுதும் விடிய, விடிய மழை பெய்துள்ளது. பல லே - அவுட்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. மக்கள் இரவு முழுதும் உறங்க முடியாமல் பரிதவித்தனர்.

ஆதரவற்றோர் இல்லத்திலும், நீர் புகுந்துள்ளது. அவர்களுக்கு உணவு வசதியும் இல்லை. கடந்த முறை மழை பெய்து, சாயி லே - அவுட், நந்தகோகுலா லே - அவுட் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பார்வையிட்ட துணை முதல்வர் சிவகுமார், மாநகராட்சி உயர் அதிகாரிகள், வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதி வார்த்தையோடு நின்றுவிட்டது.

இம்முறையும் அந்த லே - அவுட்களை, வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் பிரச்னைகளை கேட்கவும், யாரும் முன்வரவில்லை. ஹெப்பால், கோரமங்களா, விருஷபாவதி கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேலும் மூன்று, நான்கு நாட்கள் மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உடனடியாக அவசர செயற்படை அமைத்து, உதவி எண் துவங்க வேண்டும்.

தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த வீடுகளில் வசிப்போருக்கு உணவு, சிற்றுண்டி வசதி செய்யுங்கள். இரண்டு மாதங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும்.

முந்தைய ஆண்டு நடந்த குளறுபடிகளில் இருந்து, அரசு பாடம் கற்கவில்லை. அரசின் பொறுப்பற்ற தன்மையால், அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.

மழை பெய்வதற்கு முன்பே, சாக்கடைகள், பாதாள சாக்கடைகள், கால்வாய்களில் மண், கழிவுகளை அகற்றி மழைநீர் சுமுகமாக செல்ல வழி செய்திருக்க வேண்டும்.

நகரின் பல இடங்களில் ஒயிட் டாப்பிங், சாலை பழுது பணிகள் நடக்கின்றன. இந்த இடங்களில் கழிவு பொருட்களை அகற்றியிருந்தால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது.

பெங்களூரு மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே, அசம்பாவிதங்களுக்கு காரணம் என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார். நகர பொறுப்பு அமைச்சர் சிவகுமாரின் தோல்விக்கு, இதைவிட வேறு சான்றிதழ் வேண்டுமா.

கடந்தாண்டு சட்டசபை தொகுதிகளில், மக்கள் தொடர்பு கூட்டம் நடத்திய சிவகுமார், பொது மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அவைகள் என்னவாயிற்று என்பதற்கு, அவர் பதில் அளிக்க வேண்டும். மக்களின் வீட்டு வாசலுக்கு வெள்ள நீரையும், குப்பை, கழிவுகள் வரும்படி செய்ததே, அவர் செய்த சாதனையாகும்.

கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை போன்று, சிவகுமார் நடந்து கொள்கிறார். முந்தைய அரசின் மீது குற்றம்சாட்டுகிறார். இரண்டு ஆண்டுகளாக, இவர் என்ன வெட்டி முறித்தார். இதுதானா பிராண்ட் பெங்களூரு. உலக அளவில் பெங்களூரின் மானம் போய்விட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில், துணை முதல்வர், அமைச்சர்கள் சாதனை மாநாடு நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். மாநிலம் தற்போதுள்ள சூழ்நிலையில், சாதனை மாநாடு அவசியமா. இவர்கள் மாநாடு நடத்தும் அளவுக்கு, என்ன சாதித்துவிட்டனர். மாநாட்டை நிறுத்தி விட்டு, உடனடியாக மழைச்சேத நிவாரண பணிகளை மேற்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியதாவது:


ஒரு பக்கம், மழையாலும், மற்றொரு பக்கம் விலை உயர்வாலும் மக்கள் பரிதவிக்கின்றனர். காங்கிரஸ் அரசு வந்த நாளில் இருந்தே, ஊழல் தாண்டவமாடுகிறது. விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் சாதனை மாநாடு நடத்துகின்றனர்.

வளர்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டது. நிதி கிடைக்கவில்லை என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே கூறுகின்றனர். இந்த நிலையில் என்ன காரணத்தை கொண்டு, சாதனை மாநாடு நடத்துகின்றனர். இது நகைப்புக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us