ஆன்லைன் வகுப்பு நடத்த கோரும் பிரதமர் அழைப்புக்கு எதிர்ப்பு
ஆன்லைன் வகுப்பு நடத்த கோரும் பிரதமர் அழைப்புக்கு எதிர்ப்பு
ADDED : மே 13, 2026 03:24 AM

பெங்களூரு: ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த, பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்கு, கர்நாடக தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 'அறிவியல்பூர்வமற்ற ஆலோசனை' என, அந்த அமைப்பு கூறி உள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையில் நடக்கும் போரால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், 'பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறையுங்கள்; பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறையுங்கள்' என்பது உட்பட, 7 கோரிக்கைகளை நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், பள்ளி வாகனங்களுக்கு டீசல் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தலாம் என்ற யோசனையுடன், மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கு, கர்நாடக தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப் பு தெரிவித்து உள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சசிகுமார் கூறியதாவது:
கொரோனா நேரத்தில், 500 நாட்களுக்கு மேல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மாணவர்கள் மீண்டு வரவில்லை. அதற்குள் மீண்டும் ஆன்லைன் வகுப்பு என்பது ஏற்க முடியாது.
ஆன்லைன் வகுப்பு நிரந்தர தீர்வு இல்லை. இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். பிரதமரின் ஆலோசனை அறிவியல்பூர்வமாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
