சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க ரூ.2,000 கட்டணத்துக்கு எதிர்ப்பு
சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க ரூ.2,000 கட்டணத்துக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 03, 2026 11:19 PM

மைசூரு: ''சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்ய, டிக்கெட் கட்டணத்தை 2,000 ரூபாய் நிர்ணயித்திருப்பது சரியல்ல,'' என, அரச குடும்பத்தின் பிரமோதா தேவி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரு சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க, டிக்கெட் கட்டணம் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனை நடத்தி, முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த அரசு, எந்த வகையில் முடிவு செய்தது என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை, ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. திடீரென முடிவு செய்துள்ளனர்.
சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்திருப்பது சரியல்ல. எப்படி டிக்கெட் வாங்குவது என்ற தகவலும் இல்லை. ஆன்லைனில் வாங்க வேண்டுமா அல்லது கோவில் அருகில் வந்து வாங்க வேண்டுமா என்பது பற்றி தெளிவாக கூறவில்லை. எங்களுக்கும் இதுபற்றி சரியான தகவல் தெரியவில்லை.
சாமுண்டீஸ்வரி தேவி கோவில் நிர்வாகம் தொடர்பாக, நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் தரப்பில் யாருக்கு என்ன விளக்கம் அளிக்க வேண்டுமோ, அதை அளித்துள்ளோம்.
ஜூலை 17ம் தேதி முதல், ஆஷாடா வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் துவங்கும். சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க, யார் 2,000 ரூபாய் நிர்ணயித்தனரோ, அவர்களுக்கு கடவுள் நல்ல புத்தியை கொடுக்கட்டும். இந்த அளவுக்கு டிக்கெட் நிர்ணயிக்க வேண்டிய அவசியமே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
