/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முக்கிய சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
/
முக்கிய சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
முக்கிய சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
முக்கிய சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் தயாரிக்க உத்தரவு
ADDED : ஜூலை 15, 2025 04:36 AM

பெங்களூரு: நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளை மேம்படுத்த திட்டங்களை உருவாக்கும்படி அதிகாரிகளை பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் அறிவுறுத்தி உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியில் நிலவும் பல பிரச்னைகள் குறித்து நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கமிஷனர் பேசியதாவது:
நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளை மேம்படுத்துவது குறித்து விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும். ஏற்கனவே, சில சந்திப்புகளில் பணிகள் நடக்கின்றன. மற்ற சந்திப்புகளை மேம்படுத்த விரிவான திட்டம் தயாரிக்க வேண்டும்.
மாநகராட்சியில் 53 பகுதிகளில் வெள்ள பாதிப்பு அபாயம் இருந்தது. இவற்றில் 4 பகுதிகள், வெள்ளத்தின்போது பாதிக்காத வகையில் சரிசெய்யப்பட்டு விட்டன. மீதமுள்ளவற்றில் 22 பகுதிகளில் உலக வங்கியின் நிதியுதவியுடன் பணிகள் நடக்கின்றன. மற்ற பகுதிகளிலும் பணிகளை துவக்க வேண்டும்.
நகரில் அனுமதியின்றி கட்டடங்களை கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி உயரமாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, பெஸ்காமிடம் அனுமதி பெற்று மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். இதன் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சாலை, மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளின்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்த வேண்டும். இதை மண்டல கமிஷனர்கள் மேற்பார்வையிடுவது முக்கியம்.
நடப்பு நிதியாண்டில் 6,256 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 2,966 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் சொத்து வரி வசூலிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சாலைப் பள்ளங்களை சரிசெய்யும் பணிகளை விரைவாகவும், சாலை குறித்த புகார்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கவும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பிரச்னைகள் இல்லாமல், நடைபாதைகளை மேம்படுத்தவும், கால்வாய்கள், நடைபாதைகளை தொடர்ந்து சுத்தம் செய்யவும் வேண்டும்.
இவ்வாறு பேசினார்.