பாதசாரிகள் நடப்பதற்கே நடைபாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
பாதசாரிகள் நடப்பதற்கே நடைபாதைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
ADDED : ஆக 26, 2026 02:55 AM
புதுடில்லி: பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதைகளை உறுதி செய்யுமாறு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சாலை விபத்தில்,5 வயது மகனை பறிகொடுத்த தந்தை இழப்பீடு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, நடைபாதையின் அவசியத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், அதை தனி வழக்காக தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
மீண்டும் விசாரணை கடந்த ஜூன் 19ல் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், 'முறையாக வரையறுக்கப்பட்ட நடைபாதையில் நடந்து செல்வது மக்களின் அடிப்படை உரிமை.
'சாலைகளில் மோட்டார் வாகனங்கள் செல்வதை விட, நடைபாதைகளில் பாதசாரிகளுக்கே அதிக முன்னுரிமை தரப்பட வேண்டும்' என தெளிவுப்படுத்தியது.
மீண்டும் கடந்த ஆக., 3ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 'எங்கெல்லாம் சாலைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு முறையாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகள் இருக்க வேண்டும்' என தெளிவுப்படுத்தியது.
மேலும், 'நடைபாதைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்து, வாகன போக்குவரத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
'நடைபாதையில் எந்த அச்சமும் இல்லாமல் நடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையை பாதசாரிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்' என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் அராதே அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ''சாலைகள் மத்திய அரசு பட்டியலில் இல்லை. அவை மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குட்பட்டவை.
''எனவே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளன,'' என்றார்.
அறிக்கை தாக்கல் இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனித வாழ்வில் நடைபாதைகள் என்பது பிரிக்க முடியாத அங்கம். சாலைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, ஆக்கிரமிப்பற்ற மற்றும் சரியான முறையில் வரையறுக்கப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்படுவது அவசியம்.
அதை அமைப்பது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
