ஓசூர் - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சாத்தியமில்லை பெங்களூரு மெட்ரோ நிறுவனம் மீண்டும் கைவிரிப்பு
ஓசூர் - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சாத்தியமில்லை பெங்களூரு மெட்ரோ நிறுவனம் மீண்டும் கைவிரிப்பு
ADDED : ஆக 26, 2026 02:56 AM
ஓசூர்: 'ஓசூர் - பொம்மசந்திரா இடையேயான இரு மாநில மெட்ரோ ரயில் சேவை சாத்தியமில்லை' என, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் மீண்டும் அறிக்கை அளித்துள்ளது.
அந்தஸ்து கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவிலிருந்து, மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, 11.7 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, அம்மாநில அரசு ஆலோசிக்கிறது.
அங்கிருந்து, தமிழகத்தின் ஓசூர் வரை, 11 கி.மீ., துாரத்திற்கு இந்த சேவையை நீட்டிக்க கோரிக்கை வலுத்துள்ளது. இது சாத்தியமானால், தென்னிந்தியாவில் இரு மாநிலங்களுக்கு இடையே, முதல் மெட்ரோ ரயில் சேவை என்ற அந்தஸ்து கிடைக்கும்.
அதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். கடந்தாண்டு அக்டோபரில், பொம்மசந்திரா - -ஓசூர் மெட்ரோ ரயில் நேரடி இணைப்பு, 'தொழில்நுட்ப ரீதியாக சா த்தியமில்லை' என, கர்நாடகா மாநில அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிக்கை அளித்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில், ஓசூர் - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவை குறித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
இச்சூழலில், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 'இணைப்பு திட்டம் மீண்டும் சாத்தியமில்லை' என்ற அறிக்கையை, கர்நாடகா மாநில அரசுக்கு வழங்கியுள்ள தகவல் வெளியாகிஉள்ளது.
சென்னை, பெங்களூரு இரு மெட்ரோ நிறுவனங்களும் வெவ்வேறு தொழில்நுட்ப கட்டமைப்புகளை கொண்டது. இவற்றை, ஒரே பாதையில் இணைத்து இயக்குவது பெரும் தொழில்நுட்ப சவாலாக இருக்கும்.
தடைக்கல் மேலும், நிர்வாக அனுமதி, நிதி, வருவாய் பங்கீடு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள், உயர்மின் அழுத்த வேறுபாடு, சிக்னல் கட்டமைப்புகள் போன்றை வேறுபட்டிருப்பதால், இத்திட்டம் சாத்தியமில்லை என, கர்நாடகா அரசிற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக எல்லையிலுள்ள ஓசூர், தொழிற்சாலை நிறைந்த பகுதி. பெங்களூரு நகருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருவதால், பெங்களூரு வளர்ச்சி பாதிக்கும் என, அம்மாநில அரசு நினைக்கிறது. இதுவே மெட்ரோ ரயில் சேவை இணைப்புக்கு தடைக்கல்லாக உள்ளது.
இதற்கிடையே, ஓசூரிலிருந்து தமிழக எல்லை வரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி வரை, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனும், மெட்ரோ ரயில் சேவையை தனித்தனியாக ஏற்படுத்தவும், நடைபாதை மூலமாக, இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவையை இணைக்க பரிசீலனை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
