வெளியில் அந்தரங்க உறுப்பு பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது ஐகோர்ட் தீர்ப்பு
வெளியில் அந்தரங்க உறுப்பு பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : செப் 23, 2026 02:35 AM
பெங்களூரு: தற்செயலாக அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்துவதை, பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்று கூறியுள்ள, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, வாலிபர் மீதான பாலியல் தொல்லை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரை சேர்ந்தவர் அனில் ரோகன், 26. இவர், கடந்த ஜனவரி 24 ம் தேதி, பெங்களூரு ஹெப்பால் பகுதியில், சாலையோரம் சிறுநீர் கழித்தார். திடீரென அவர் திரும்பிய போது, அந்த வழியாக சென்ற இளம்பெண், அனில் ரோகனின் அந்தரங்க உறுப்பை பார்த்து விட்டார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளம்பெண் அளித்த புகாரில் அனில் மீது, ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அனில் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், 'பஸ்சில் இருந்து இறங்கிய மனுதாரர் அவசரமாக சிறுநீர் கழிக்க இடம் தேடினார். பொது கழிப்பறை இல்லாததால், சாலையோரமாக கழித்தார். திடீரென திரும்பிய போது புகார்தாரர் வந்து விட்டார். இச்சம்பவம் தற்செயலாக நடந்தது. ஆனால் இது குற்ற செயலாக சித்திகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு, புகார்தாரரை பாலியல்ரீதியாக துன்புறுத்தும் நோக்கம் இல்லை. தற்செயலாக அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்துவதை குற்றமாக கருத முடியாது. அவர் மீதான வழக்கு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.
இதற்கு போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறினார்.
அவர் கூறியதாவது:
கழிப்பறை வசதி இல்லாத பொது இடத்தில், சாலையோரத்தில் சிறுநீர் கழிக்கும்போது, ஒரு ஆண் தற்செயலாக தனது அந்தரங்க உறுப்பை வெளிப்படுத்துவதை பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது. மனுதாரர் தன்னை கேலி செய்ததாகவோ, துரத்தியதாகவோ, பாலியல்ரீதியாக சைகைகள் செய்ததாகவோ, புகார்தாரர், புகாரில் குறிப்பிடவில்லை.
பாலியல் நோக் கம் இல்லாத இதுபோன்ற சங்கடமான சூழ்நிலையை, குற்றவியல் வரம்பிற்குள் கொண்டு வர முடியாது. மனுதாரரிடம் விசாரணை நடத்துவது, சட்ட நடைமுறையை அவருக்கு ஒரு தண்டனையாக மாற்றுவது போன்றது ஆகும். இதனால் மனுதாரர் மீதான வழக்கு, அவர் மீது போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
