ADDED : செப் 23, 2026 02:36 AM
பெங்களூரு: 'வந்தே மாதரம்' பாடல் 2 பத்திகள் பாடும் மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற மாநில அரசின் உத்தரவை எதிர்த்து பெங்களூரை சேர்ந்த வக்கீல் கிரிஷ் பரத்வாஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி மனுதாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதிகள் அனுசிவராமன், விவேகானந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல்: வந்தே மாதரத்தை சுருக்க, மாநில அரசுக்கு அதிகாரமில்லை. தேசிய சின்னம், தேசிய பாடல் ஆகியவற்றின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கிறது. இது முறையற்ற அமைச்சரவை கூட்டத்தால் எடுக்கப்பட்ட தவறான முடிவு.
மாநில அரசு தரப்பு வக்கீல்: தேசிய கீதத்தை பாடுவது போல, தேசிய பாடலான வந்தே மாதரத்தை பாடுவது கட்டாயம் கிடையாது.
மத்திய அரசு தரப்பு வக்கீல்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி அனைத்து பத்திகளையும் பாடுவது கட்டாயமாகும். அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு புறக்கணிக்க முடியாது.
நீதிபதிகள்: இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், இம்மனு மீதான விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
