UPDATED : நவ 12, 2026 12:00 AM
ADDED : நவ 11, 2026 07:08 PM

- நமது நிருபர் -
பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி தாலுகா எத்தினமனே கிராமத்தில், கன்வா ஆற்றின் குறுக்கே ஒய்.ஜி.குட்டா அணை உள்ளது. இந்த அணையின் முழு பெயர் எத்தினமனே குலகஞ்சி குட்டா. மாகடி, ராம்நகர் தாலுகாக்களில் உள்ள 87,000 வீடுகளுக்கு, இந்த அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், 155 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அணை சுற்றுலா தலமாகவும் மாறி வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து, 675 மீட்டர் உயரத்தில் பாறைகள், பசுமையான விவசாய நிலங்களுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த அணை, அமைதியான இடத்தை தேடும் சுற்றுலா பயணியருக்கு வரப்பிரசாதமாக உள்ளது.
அணையில் தற்போது கயாகிங், பெடல் போட், ஜெட் ஸ்கீயிங், பனானா போட் ரைடு போன்ற நீர் சாசக விளையாட்டுகள், உள்ளூர் சுற்றுலா முகவர்களால் நடத்தப்படுகின்றன. நீர் சாகச விளையாட்டிற்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அணைக்கு செல்ல நுழைவு கட்டணம் இல்லை. கயாகிங், பெடல் போட்டுகளில் சென்ற படி, அணையை சுற்றிப்பார்ப்பது பிரமிப்பாக இருக்கும்.
நண்பர்களுடன் ஒரு குழுவாக இங்கு சுற்றுலா வருவோருக்கு, பனானா போட் ரைடு, திரில்லிங் அனுபவத்தை தரும். இப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் குறைவு. அரிய வகை பறவைகளின் புகலிடமாக விளங்கும் இங்கு, அதிகாலை நேரத்தில் நீர் காகங்கள், மீன்கொத்திகள், சாம்பல் நாரைகள், குளத்து நாரைகளை கூட்டம், கூட்டமாக பார்க்கலாம். அணையின் சாம்பல் நீல நிற நீருக்கும், பின்னணியில் இருக்கும் பச்சை பசலேன காட்சி அளிக்கும் புல்வெளிகளும் புகைப்பட பிரியர்களுக்கு விருந்தாக அமையும்.
காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அணைக்கு செல்லலாம். கிராம பகுதியில் இருந்து அணையை சென்றடைய 4 கி.மீ., துாரம் குறுகிய சாலையில் தான் பயணிக்க வேண்டும். முந்திரி தோட்டம், தக்காளி தோட்டங்களுக்கு இடையில் பயணிப்பது புதிய அனுபவத்தை தரும்.
எத்தினமனே கிராமத்தில் பெரிய ஹோட்டல்கள் இல்லாததால், மாகடியில் உணவு, தண்ணீர் பாட்டில்கள் வாங்கி செல்வது நல்லது. பெங்களூரு அருகில் ஒரே நாளில் சென்று வர ஏற்ற இடமாக உள்ளது. கிராமப்புற சுற்றுலாவை விரும்புவோருக்கு இந்த இடம் கண்டிப்பாக வரப்பிரசாதம்.
