பெங்களூரின் 35 சாலைகளில் வருகிறது கட்டண பார்க்கிங் வசதி
பெங்களூரின் 35 சாலைகளில் வருகிறது கட்டண பார்க்கிங் வசதி
ADDED : டிச 21, 2025 05:19 AM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள, 35 சாலைகளில், வாகனங்களை, 'பார்க்கிங்' செய்வதற்கு கட்டணம் வசூலிக்க ஜி.பி.ஏ., முடிவு செய்து உள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை எளிதில் பார்க்கிங் செய்யலாம்.
பெங்களூரில், வாகனங்களை நினைத்த இடத்தில் நிறுத்தி விட்டு செல்வது என்பது இயலாத காரியம். போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில், வாகனங்களை நிறுத்த இடமும் கிடைக்காது. இதனால், வார இறுதி நாட்களில் கார்களில் வெளியே செல்வோர், கார் பார்க்கிங் வசதியுடன் இயங்கும் திரையரங்கு, மால், துணிக்கடை, உணவகங்களுக்கு செல்வதையே விரும்புகின்றனர். இந்த நிலையை புரிந்து கொண்ட ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், வாகன ஓட்டிகளுக்கு உதவ முன்வந்து உள்ளது.
இதன்படி, பெங்களூரில் உள்ள சர்ச் சாலை, பிரிகேட் சாலை, மியூசியம் சாலை, பி.வி.கே.அய்யங்கார் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலை, வாணி விலாஸ் சாலை, கோளரங்கம் சாலை, கனகபுரா சாலை உள்ளிட்ட, 35 சாலைகளில், வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சாலைகளில், பைக்கை ஒரு மணி நேரம் நிறுத்த 15 ரூபாயும்; கார் நிறுத்த, 30 ரூபாயும்; ஒரு நாள் பைக்கை நிறுத்த 75 ரூபாயும்; கார் நிறுத்த 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். மாதாந்திர பாஸுக்கு பைக்குக்கு 1,500 ரூபாயும்; காருக்கு 3,000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட ஜி.பி.ஏ., திட்டமிட்டு உள்ளது.
இதற்காக சாலைகளின் ஓரங்களில் வண்ணம் பூசப்பட்டு, பார்க்கிங் செய்வதற்கான இடம் தெளிவாக காட்டப்படும். இதில், வாகனங்களை எளிதில் பார்க்கிங் செய்ய முடியும். இத்திட்டத்தை சென்ட்ரல் மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
