ADDED : மே 12, 2025 06:55 AM
பெங்களூரு: ''இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்,'' என பா.ஜ., - எம்.பி., ஷோபா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உலக தலைவர் ஒரு வேண்டுகோள் வைத்தால், அதை நாம் பின்பற்ற வேண்டும். அதை நாம் பின்பற்றினோம்; பாகிஸ்தான் பின்பற்றவில்லை. இந்நாட்டு பயங்கரவாதிகள் இருப்பிடத்தை நமது ராணுவம் அழித்தது. எல்லையில் பதிலடி கொடுக்கின்றனர்.
நமது நாட்டின் தாக்குதலுக்கு பயந்து, அமெரிக்கா உட்பட, பல நாடுகளின் கால்களை பாகிஸ்தான் பிடித்து கொண்டது. தாக்குதலை நிறுத்த வேண்டும். தாக்குதலை தொடரும் சக்தி தனக்கு இல்லை என, மன்றாடியது. அதன்பின் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து, சமாதான பேச்சு நடத்தும்படி கூறினார். அதன் பின்னரும் பாகிஸ்தான் நரி புத்தியை காட்டியுள்ளது. இதை நிறுத்த வேண்டும்.
நமது ராணுவத்தினருக்கு ஆதரவாக, மொத்த நாடும் நின்றுள்ளது. தின்பதற்கு உணவு, அருந்துவதற்கு குடிநீர் இல்லாத நாடு பாகிஸ்தான். இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது; இதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.