தமிழ் பற்று உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 'கடல் தாமரை' புத்தக பூங்காவை வாழ்த்திய பழனிசாமி
தமிழ் பற்று உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 'கடல் தாமரை' புத்தக பூங்காவை வாழ்த்திய பழனிசாமி
ADDED : ஜூன் 17, 2026 01:59 AM

பெங்களூரு: ''தமிழ் பற்று உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம்,'' என, 'தினமலர்' வாசகர் பழனிசாமி வாழ்த்தினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலை 'தினமலர்' அலுவலகத்தில் உள்ள, கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு, 'தினமலர்' வாசகர் பழனிசாமி, 79, நேற்று வந்தார். மருத்துவம், ஆன்மிகம் தொடர்பான 60க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
அவர் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். பெங்களூரு ஆடுகோடியில் வசிக்கிறேன். ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தில் பராமரிப்பு பிரிவில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளேன்.
புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று, எனது மனதிற்குள் விதை போட்டது எனது பள்ளி ஆசிரியர்கள் தான்.
புத்தகங்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எங்கு புத்தக கண்காட்சி நடந்தாலும் அங்கு சென்று வாங்கி வருவேன். தினமும் ஒரு மணி நேரம் புத்தகங்கள் படிக்கிறேன். மருத்துவம் தொடர்பான புத்தகங்களை ஆர்வமாக படிப்பேன்.
அதில் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி உடல் நலத்தை பேணுகிறேன்.
எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் செல்வது அரிதாகவே நடக்கும். புத்தகங்களை தொடர்ந்து படிப்பது ஒழுக்கம், தன்னம்பிக்கையை கற்று கொடுக்கும்.
இப்போது ஏ.ஐ., செயலி கூறும் விஷயங்கள் கூட, பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியான புத்தகங்களில் உள்ளது.
தமிழ் பற்று உள்ளவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக, கடல் தாமரை புத்தக பூங்கா உள்ளது. இதற்கு எனது வாழ்த்துகள். நுாலகம் ஆரம்பித்தது நல்ல முயற்சி; தமிழர்கள் ஆர்வத்தை துாண்டுகிறது.
புத்தகங்களை நல்ல நண்பனாக பார்த்தால், அது நல்ல வழிகாட்டியாக இருக்கும். நுாலகத்திற்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்ய தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
