/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பான் பெருமாள் கோவில் தலைவர் திடீர் மரணம்
/
பான் பெருமாள் கோவில் தலைவர் திடீர் மரணம்
ADDED : ஜன 27, 2026 04:52 AM

ஹலசூரு: ஹலசூரு பான் பெருமாள் கோவில் தலைவர் என்.இ.ஏகமூர்த்தி ராமானுஜதாஸ் மரணம் அடைந்தார்.
பெங்களூரு ஹலசூரில் உள்ள பான் பெருமாள் கோவிலின் தலைவராக இருந்தவர் என்.இ.ஏகமூர்த்தி ராமானுஜதாஸ், 72. இவர், பான் பெருமாள் கோவிலில் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சிலைகளை நிறுவி, அதன் வழிபாடுகளை அறிமுகப்படுத்தியதிலும், திவ்ய பிரபந்தம் ஓதுவதற்காக பலரை உருவாக்கினார். கோவிலின் ஆண்டு விழா, 39 ஆண்டுகளாக ஆண்டாள் திருக்கல்யாணம், நுாறு தடா உத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, பிரம்மோற்சவம், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் உட்பட பல விழாக்களை முன்நின்று நடத்தியவர்.
வைஷ்ணவ சொற்பொழிவுகளை நிகழ்த்துவற்கு ஊக்குவித்து உபன்யாசம் கேட்கும் கலாசாரத்தை வளர்த்து, பொதுமக்களிடம் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.
சிறந்த பஜனை பாடகராக விளங்கிய ஏகமூர்த்தி பட்டர், பஜனை பாட ஆரம்பித்தால் பக்தர்கள் பக்தி பரசவத்தில் மெய்சிலிர்த்து விடுவர். திவ்ய பிரபந்தம் ஓதுவதிலும், நாம சங்கீர்த்தனம் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.
நேற்று முன் தினம் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். அன்றிரவு 1?50 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பக்தர்கள் திரளாக அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு நேற்று மாலை நடந்தது.

