துமகூரு நகர் பஸ் நிலையத்தில் உள்ள கேன்டீனில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கேன்டீனுக்கு சாப்பிட வந்தவர்களுக்கு, தன் கையாலே என்ன வேண்டுமென பார்த்து பார்த்து பரிமாறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் அரசு பணிகளில் எஸ்.சி., - எஸ்.டி., நியமனத்தில் விதிகளை மீறியதாக கூறப்படும் புகார் குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதினார். கடிதத்தில், உடனடியாக பிரச்னை தீர்க்க வேண்டும் என, முதல்வரை தேசிய தலைவர் கடிந்து கொண்டாராம். இதன் மூலம், தானே உயர்ந்தவன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க கார்கே முயற்சி செய்துள்ளதாக கட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகா, பரத்வாடா கிராமத்தில் சமீபத்தில் இரண்டு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். இச்செய்தியை அறிந்த, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சந்தோஷ் லாட், இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறினார். அவர்களின் குடும்பத்தினருக்கு தன் அறக்கட்டளையிலிருந்து 2.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். கடனை அடைப்பதாகவும் கூறி, தன் வள்ளல் தனத்தை காண்பித்தார்.

