அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பஞ்சகர்ம சிகிச்சை பிரிவு நவீனமயமாகிறது
அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பஞ்சகர்ம சிகிச்சை பிரிவு நவீனமயமாகிறது
ADDED : மே 09, 2025 12:39 AM

பெங்களூரு: சாமராஜேந்திரா அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் உள்ள, பஞ்சகர்ம பிரிவை 'ஹைடெக்' காக மாற்ற, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதிதாக சிகிச்சை அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மருத்துவ கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் தன்வந்த்ரி சாலையில், அரசு சார்ந்த ஜெய சாமராஜேந்திரா ஆயுர்வேத மருத்துவமனை செயல்படுகிறது. மருத்துவமனையின் பஞ்சகர்மா பிரிவு அதிநவீனமாக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
வரவேற்பு
அலோபதி சிகிச்சை முறையில், ஆராய்ச்சிகள் அதிகரிக்கும் நிலையில் ஆயுர்வேத சிகிச்சைக்கும், மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தனியார் சார்ந்த ஆயுர்வேத சிகிச்சை மையங்களும் அதிகரிக்கின்றன. இங்கு பஞ்சகர்ம சிகிச்சை முறைக்கு, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மக்களின் வசதிக்காக, பெங்களூரின் தன்வந்த்ரி சாலையில் உள்ள, அரசு ஆயுர்வேத மருத்துவமனையின், பஞ்சகர்ம பிரிவு நவீனமயமாக்கப்பட்டது. மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் மூன்று மாடிகள் பஞ்சகர்ம சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 18 அறைகள் நவீனப்படுத்தப்பட்டன.
தன்வந்த்ரி சாலையில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவமனை, 60 ஆண்டுகளாக செயல்படுகிறது. 300 படுக்கை வசதி கொண்டது. தினமும் சராசரியாக 600 வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். 150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சேர்ந்து, சிகிச்சை பெறுகின்றனர்.
ஆயுர்வேத சிகிச்சை நடைமுறையில் ஒன்றான, பஞ்சகர்மா சிகிச்சையில் அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம், ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று கொள்கின்றனர்.
பஞ்சகர்ம சிகிச்சை ஐந்து கட்டங்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. உடலை துாய்மைப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும். வாதம், பித்தம், கபங்களை அகற்றி உடலை வலிமையாக்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட, பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், சிகிச்சை பெறுகின்றனர்.
இலவசம்
பழைய கட்டடத்தில், இலவசமாக பஞ்சகர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. நவீனப்படுத்தப்பட்ட அறைகளில் தங்கி சிகிச்சை பெற, நாள் ஒன்றுக்கு 375 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அறைகள் நவீனப்படுத்திய பின், கட்டணம் உயர்த்தப்பட்டது. இங்கு 80 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
பஞ்சகர்ம சிகிச்சை பிரிவின் 18 அறைகள், 2.96 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு அறைக்கும் புதிதாக உபகரணங்கள் பொருத்தி, விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அறையின் வெளி வளாகத்தில் உதவியாளர்கள் ஓய்வு எடுக்க, சோபாக்கள் போடப்பட்டுள்ளன. அறையின் உள்ளேயும் தியானம் செய்ய இட வசதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை அறைகள் ஒவ்வொன்றும், குளியலறை அடங்கியது. உதவியாளர்கள் தங்க தனி அறை உள்ளது. மரத்தினால் ஆன மசாஜ் டேபிள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. வெளியே நடமாட விசாலமான இடம் உள்ளது.
மாறிய காலகட்டத்தில், ஆயுர்வேத சிகிச்சையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எலும்பு முறிவு போன்ற பிரச்னைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்யாமல் குணப்படுத்தலாம். இதே காரணத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சிகிச்சைக்கு வருவோருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
