/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியை திருமணம் செய்த பஞ்., தலைவர் தப்பி ஓட்டம்
/
சிறுமியை திருமணம் செய்த பஞ்., தலைவர் தப்பி ஓட்டம்
ADDED : ஆக 31, 2025 11:13 PM

பெலகாவி: மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டமான பெலகாவியில், கிராம பஞ்சாயத்து தலைவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
கர்நாடகாவில் குழந்தை திருமணங்களை, அரசு தடை செய்துள்ளது. ஆனால், முழுதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்று திருமணங்களை தடுத்து நிறுத்துவதுடன், பெற்றோருக்கு புத்திமதி கூறுகின்றனர்.
இச்சூழ்நிலையில், கிராம பஞ்சாயத்து தலைவரே, 15 வயது சிறுமியை திருமணம் செய்து, சட்டத்தை மீறியது தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின் பஸ்சாபுரா கிராம பஞ்சாயத்து தலைவர் பீமஷி காலிமனி, 30.
இவர் 2023 நவம்பர் 5ம் தேதி, 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமடைந்துள்ளதால், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து, யம்கன்மரடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
தகவல் கிடைத்த பின், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், நான்கு முறை பஸ்சாபுரா கிராமத்துக்கு சென்றும், கர்ப்பிணியான சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
பீமஷி காலிமனி, தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, கைதாகாமல் தப்பித்துள்ளார். தன் மனைவி திருமண வயதை அடைந்தவர் என்பதை காட்டும் நோக்கில், போலியான பிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். இந்த சான்றிதழை அதிகாரிகள் கைப்பற்றி, சிறுமியின் உண்மையான பிறப்பு சான்றிதழுடன் ஒப்பிட்டு பார்த்த போது, அவருக்கு 15 வயது என்பது தெரிந்தது.
பீமஷி காலிமனி மீது, 'போக்ேசா' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த பீமஷி காலிமனி, தலைமறைவாகி விட்டார். அவரையும், கர்ப்பிணி சிறுமியையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மாவட்டத்திலேயே, இச்சம்பவம் நடந்துள்ளது.