/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாற்று இலாகா ஒதுக்கும்படி பரமேஸ்வர் வலியுறுத்தல் உள்துறை வேண்டாம்! முதல்வர், துணை முதல்வருடன் அவசர ஆலோசனை
/
மாற்று இலாகா ஒதுக்கும்படி பரமேஸ்வர் வலியுறுத்தல் உள்துறை வேண்டாம்! முதல்வர், துணை முதல்வருடன் அவசர ஆலோசனை
மாற்று இலாகா ஒதுக்கும்படி பரமேஸ்வர் வலியுறுத்தல் உள்துறை வேண்டாம்! முதல்வர், துணை முதல்வருடன் அவசர ஆலோசனை
மாற்று இலாகா ஒதுக்கும்படி பரமேஸ்வர் வலியுறுத்தல் உள்துறை வேண்டாம்! முதல்வர், துணை முதல்வருடன் அவசர ஆலோசனை
ADDED : ஜூன் 08, 2025 10:47 PM

கர்நாடக உள்துறை அமைச்சராக இருப்வர் பரமேஸ்வர், 73. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மாநில காங்கிரஸ் தலைவராக எட்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர். உயர்கல்வி, மருத்துவ கல்வி, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளை கையாண்ட அனுபவம் கொண்டவர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் உள்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார். ம.ஜ.த., கூட்டணி அரசில் துணை முதல்வராக இருந்தார். 2023 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின், “வேண்டாம்” என்று பரமேஸ்வர் மறுத்த போதும், “உள்துறையை திறம்பட உங்களால் மட்டுமே நிர்வகிக்க முடியும்,” என்று கூறி சித்தராமையா சமாதானப்படுத்தினார்.
ஆனால் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பிரச்னைகளையே பரமேஸ்வர் சந்தித்து வருகிறார். ஹூப்பள்ளியில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் நேகா கொலை; பெலகாவியில் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது; ஹாவேரியில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது; விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம்; மைசூரு கலவரம்; பெங்களூரில் அதிகரித்த கொலைகள்; பெண்களுக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லைகள்; பஜ்ரங் தள் அமைப்பின் சுகாஸ் ஷெட்டி கொலை உட்பட பல வழக்குகள், பரமேஸ்வர் நிம்மதியையும், துாக்கத்தையும் கெடுத்தன.
உள்துறை அமைச்சர் பதவிக்கு பரமேஸ்வர் லாயக்கற்றவர் என, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வசைபாடுகின்றன.
தற்போது சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்து இருப்பது, பரமேஸ்வருக்கு மீண்டும் மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்யாததால் தான், அப்பாவி மக்களின் உயிர் பறிபோனது என்று, எதிர்க்கட்சிகள் தினமும் விமர்சிக்க தொடங்கியுள்ளன. இதனால் பரமேஸ்வர் நொந்து போய் உள்ளார்.
இதுதொடர்பாக, அண்மையில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பரமேஸ்வர் பேசினார்.
அப்போது, “நான் வேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக எனக்கு உள்துறையை கொடுத்தீர்கள். மாநிலத்தில் எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு என்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது. சின்னசாமி மைதானம் முன் 11 பேர் இறந்தது எனக்கு வேதனை, மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
“விதான் சவுதா முன் நிகழ்ச்சி நடப்பது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என் கவனத்திற்கு எதுவுமே வரவில்லை. அதிகாரிகள் அவர்களாக முடிவு எடுத்து, ஏற்பாடு செய்துள்ளனர்.
“போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் விஷயத்திலும் என் மீது பழி விழுகிறது. உள்துறை எனக்கு வேண்டவே வேண்டாம். அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, தயவு செய்து எனக்கு வேறு ஏதாவது துறை கொடுத்துவிடுங்கள்.”
இவ்வாறு முதல்வரிடம் பரமேஸ்வர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்கு முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், 'விதான் சவுதாவில் பாராட்டு விழா நடத்தினால், பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும்' என, நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் சத்யவதிக்கு விதான் சவுதா டி.சி.பி., கரிபசன கவுடா எழுதிய கடிதம் நேற்று வெளியானது.
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், டி.சி.பி., கடிதமும் அரசுக்கு எதிராக திரும்பும் என்று கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து, காவேரி இல்லத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், துணை முதல்வர் சிவகுமாருடன் நேற்று மாலை, சித்தராமையா தீவிர ஆலோசனை நடத்தினார்.
நாளை இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய பதில்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவுகளை பொறுத்து, அடுத்தகட்டத்தை நகர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.