மாணவர்களை சிமென்ட், கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் பெற்றோர் கண்டனம்
மாணவர்களை சிமென்ட், கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் பெற்றோர் கண்டனம்
ADDED : பிப் 15, 2026 06:27 AM
மாண்டியா: பள்ளி மாணவர்களை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்திய ஆசிரியர்களை பலரும் கண்டித்துள்ளனர்.
அர சு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, ஆசிரியர்கள் மோசமாக நடத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அதாவது, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது, தங்களின் வாகனங்களை கழுவ வைப்பது, தங்களின் வீட்டு வேலைகளுக்கு மாணவர்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவது போன்றவை, அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
அந்த வரிசையில், கூலியாட்களை போன்று, பள்ளி மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின், நலகுந்தி கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வகுப்பறை கட்டும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிக்கு கூலியாட்களை பயன்படுத்தாமல், மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் பயன்படுத்தி உள்ளனர். மாணவ, மாணவியர், சிமென்ட் மற்றும் கற்களை சுமந்து செல்வதை கண்ட சிலர், வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதைக்கண்ட பலரும், ஆசிரியர்களை கண்டித்துள்ளனர். பள்ளி மாணவர்களை எந்த வேலைகளிலும் ஈடுபடுத்தக்கூடாது என, அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. அதைமீறி, மாணவர்களை கட்டட கட்டுமான கூலியாட்களை போன்று பயன்படுத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோரும், பொதுமக்களும் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
