/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஏரோஸ்பேஸ்' பெண் இன்ஜி., தற்கொலை பஞ்சாப் போலீசை நம்ப மறுக்கும் பெற்றோர்
/
'ஏரோஸ்பேஸ்' பெண் இன்ஜி., தற்கொலை பஞ்சாப் போலீசை நம்ப மறுக்கும் பெற்றோர்
'ஏரோஸ்பேஸ்' பெண் இன்ஜி., தற்கொலை பஞ்சாப் போலீசை நம்ப மறுக்கும் பெற்றோர்
'ஏரோஸ்பேஸ்' பெண் இன்ஜி., தற்கொலை பஞ்சாப் போலீசை நம்ப மறுக்கும் பெற்றோர்
ADDED : மே 20, 2025 12:14 AM

பெங்களூரு : பஞ்சாபில் கட்டடத்தில் இருந்து விழுந்து இறந்த, 'ஏரோநாடிக்ஸ்' பெண் பொறியாளர் ஆகாங்ஷா, தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிந்தது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம், தர்மஸ்தலா அருகில் உள்ள போளியார் கிராமத்தில் வசிப்பவர் சுரேந்திர நாயர். இவரது மனைவி சிந்துதேவி. இத்தம்பதிக்கு ஆகாங்ஷா, 22, என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பஞ்சாபின் எல்.பி.யு., பக்வாடா கல்லுாரியில், 'ஏரோஸ்பேஸ்' பொறியியல் படிப்பை முடித்த ஆகாங்ஷா, டில்லியில் பணியாற்றி வருகிறார்.
இவர் ஜெர்மனியில் மேற்படிப்பு படித்து, ஜப்பானில் பணி செய்ய ஆசைப்பட்டார்.
இதற்காக ஒரு சான்றிதழ் பெறும் நோக்கில், தான் படித்த பஞ்சாப் கல்லுாரிக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் அங்குள்ள போலீசார், ஆகாங்ஷாவின் தந்தையை தொடர்பு கொண்டு, உங்கள் மகள் கல்லுாரி கட்டடத்தின், நான்காவது மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதனால், பெற்றோரும் விமானத்தில் பஞ்சாப் சென்றனர்.
ஆகாங்ஷாவின் இறப்பில் சந்தேகம் இருந்ததால், அங்குள்ள போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
எல்.பி.யு., பக்வாடா கல்லுாரியில் படிக்கும் போதே, அங்கு பேராசிரியராக பணியாற்றும் பிஜில் மேத்யூவை, ஆகாங்ஷா காதலித்து உள்ளார்; இது பற்றி அவரிடம் தெரிவித்தார். ஆனால், பிஜில் மேத்யூவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருப்பதால் காதலை ஏற்கவில்லை.
சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி, பஞ்சாப் சென்ற ஆகாங்ஷா, பேராசிரியர் பிஜில் மேத்யூவின் வீட்டுக்கு சென்றுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அடம் பிடித்தார். ஆனால், மேத்யூ திட்டவட்டமாக மறுத்தார்.
சம்பவ நாளன்று, கல்லுாரியில் இருவரிடையே வாக்குவாதம் நடந்தது. காதல் நிறைவேறாததால், மனம் நொந்து, கட்டடத்தில் இருந்து குதித்து, ஆகாங்ஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆகாங்ஷாவை தற்கொலைக்கு துாண்டியதாக, பேராசிரியர் பிஜில் மேத்யூ மீது, அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆகாங்ஷாவின் உடல், நேற்று மாலை தர்மஸ்தலாவுக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்குகள் நடந்தன.
இதற்கிடையே மகளின் சாவு விஷயத்தில், பெற்றோருக்கு சந்தேகம் தீரவில்லை. கல்லுாரிக்குள் சம்பவம் நடந்துள்ளதால், கல்லுாரி நிர்வாகத்தினர் மீது சந்தேகம் கொண்டு உள்ளனர்.
'இது குறித்து தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும். சம்பவத்தை திசை திருப்ப கல்லுாரியும், அங்குள்ள போலீஸ் துறையும் முயற்சிக்கின்றன. உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்' என, உயர் போலீஸ் அதிகாரிகளிடம், ஆகாங்ஷாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.