ADDED : செப் 29, 2026 03:40 AM

கதக்: கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின், கதக் மாவட்ட உதவி பொறியாளர் பர்வீஸ், 34. குடிநீர் திட்டப்பணிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்காத சூழலில் ஒப்பந்ததாரர்களின் தொல்லை தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவிட்டு தலைமறைவானார்.
இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இவரை தேடும் பணியில் ஐந்து தனிப்படைகள் ஈடுபட்டு உள்ளன.
இவரது தந்தை ஜாபர் கண்ணீர் மல்க அளித்த பேட்டி:
பெங்களூரில் மீட்டிங் இருப்பதாக சொல்லிவிட்டு சென்ற எனது மகன் பர்வீஸ், இதுவரை வீடு திரும்பவில்லை. ஒப்பந்ததாரர்கள் பலர் வீட்டின் முன்பு வந்து சத்தம் போட்டுள்ளனர். எந்த பிரச்னை குறித்தும் வீட்டில் கலந்துரையாடியதில்லை.
தற்போது, அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியவில்லை. எதற்கும் கலங்க வேண்டாம். அனைத்து பிரச்னைகளையும் நான் சமாளிக்கிறேன். விரைவில் நீ விடு திரும்பு. என் மகனை கண்டுபிடித்து தாருங்கள். அலுவலக வேலை தொடர்பாக புகார் ஏதாவது இருந்ததா என எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
