மனைவி அடித்ததால் விரக்தி கணவர் துாக்கிட்டு தற்கொலை
மனைவி அடித்ததால் விரக்தி கணவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 29, 2026 03:40 AM
லக்கரே: மனைவியிடம் அடி வாங்கியதால் அவமானமடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரின், லக்கரேவில் வசித்தவர் நவீன், 46. இவரது மனைவி கவிதா, 38. ஹாசனை சேர்ந்த தம்பதி, எட்டு ஆண்டுகளுக்கு முன், வேலை தேடி பெங்களூருக்கு வந்தனர். நவீன் ஓட்டுநராக பணியாற்றினார். ஆரம்பத்தில் பிரச்னை இல்லாமல் வாழ்ந்தனர்.
ஆனால், நவீன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதுடன், மனைவி நடத்தையை சந்தேகித்ததால், தம்பதியிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவியை கண் மூடித்தனமாக அடிப்பார். செப்டம்பர் 26ம் தேதி இரவு, குடித்து வந்த நவீன், மனைவியை அடிக்க முற்பட்டார். அப்போது பொறுமையிழந்த கவிதா, கணவரை திருப்பி அடித்தார்.
இதில், நவீனின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் கவிதா கோபத்துடன், வீட்டை வெளிப்புறம் பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
மனைவியிடம் அடி வாங்கியதால், அவமானம் அடைந்த நவீன், தன் தாய்க்கு போன் செய்து, நடந்ததை கூறிவிட்டு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 10:00 மணிக்கு மேல், மனைவி வீட்டுக்கு வந்த போது, கணவர் துாக்கிட்டு கொண்டது தெரிந்தது.
அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி, மருத்துவனைக்கு துாக்கி சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
நவீனின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த குடும்பத்தினர், அவர் தற்கொலை செய்யவில்லை. மனைவி அடித்து கொலை செய்ததாக, நந்தினி லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
