/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
/
அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
ADDED : ஏப் 11, 2025 06:56 AM
ஹூப்பள்ளி: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியின் நேகார நகரை சேர்ந்தவர் ஆதர்ஷ் கொண்டகர், 25. காய்ச்சலுக்காக, அரசு கே.எம்.சி.ஆர்.ஐ., மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென நேற்று அதிகாலை சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது தளத்தின் ஜன்னல் வழியாக குதித்தார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கம்மாரா கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக எங்கள் மருத்துவமனையில் ஆதர்ஷ் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (நேற்று) அதிகாலை 3:30 மணி அளவில் கழிப்பறைக்கு சென்றவர், ஜன்னல் வழியாக குதித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தும் மரணமடைந்தார்.
மருத்துவமனையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை. எங்கள் ஊழியர்கள் பணியில் தான் இருந்தனர்.
ஆனால் அவர் கழிப்பறை ஜன்னல் வழியாக குதித்துள்ளார். ஆனாலும் வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.