ADDED : ஏப் 23, 2026 04:15 AM

பெங்களூரு: விக்டோரியா மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், மர்ம உறுப்பில் வலி தாங்காமல் ஒருவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றியவர் ஷா நவாஸ், 45. இவருக்கு மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இவரது மர்ம உறுப்பில் கட்டி வளர்ந்ததால், ஒன்றரை மாதத்துக்கு முன், விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மர்ம உறுப்பில் இன்பெக்ஷன் ஆகியுள்ளதாக கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், தையல் போடவில்லை.
அதன்பின் பிளாஸ்டிக் சர் ஜரி பிரிவுக்கு செல்லும்படி டாக்டர் கூறினார். அங்கு சென்ற போதும் காயம் ஆறவில்லை. சர்ஜரி செய்ய முடியாது என, அங்கிருந்த டாக்டர்கள், 'டிஸ்சார்ஜ்' ஆகும்படி ஷா நவாசுக்கு நெருக்கடி கொடுத்து, வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவரது மனைவி மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து கொள்ளும்படி மன்றாடியும், மருத்துவமனை ஊழியர்கள் பொருட்படுத்தவில்லை. மூன்று நாட்கள் கணவரை நடைபாதையில் வைத்திருந்தார். தையல் போடாததால், மர்ம உறுப்பில் இருந்து ரத்தம் ஒழுகியது. வலியால் அவதிப்பட்ட ஷா நவாஸ் நேற்று காலை உயிரிழந்தார். டாக்டர்களின் அலட்சியத்தால், அவர் இறந்ததாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
