/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களுக்கு பயன்படாத 'நமது கிளினிக்'; வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருத்தம்
/
மக்களுக்கு பயன்படாத 'நமது கிளினிக்'; வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருத்தம்
மக்களுக்கு பயன்படாத 'நமது கிளினிக்'; வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருத்தம்
மக்களுக்கு பயன்படாத 'நமது கிளினிக்'; வசதிகள் இல்லாததால் நோயாளிகள் வருத்தம்
ADDED : ஜன 03, 2026 07:04 AM

பெங்களூரு: மக்களுக்கு விரைந்து சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாநில அரசு பெங்களூரில் 'நமது கிளினிக்' திறந்தது. ஆனால் சில இடங்களில் டாக்டர்கள் இல்லை, மேலும் சில இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் கிளினிக்குகள் மக்களுக்கு பயன்படுவதில்லை.
ஏழைகளுக்கு உதவும் நோக்கில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லையில், வார்டுக்கு ஒன்று வீதம் நமது கிளினிக்குகளை மாநில அரசின் ஒருங்கிணைப்பில், அன்றைய பெங்களூரு மாநகராட்சி அமைத்திருந்தது.
2022ன் பிப்ரவரியில் முதற்கட்டமாக 108 கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அதன்பின் படிப்படியாக மற்ற வார்டுகளில் திறக்கப்பட்டன. தற்போது நகரில் 243 நமது கிளினிக்குகள் செயல்படுகின்றன.
பல சிகிச்சைகள் ஒவ்வொரு கிளினிக்கிலும் தலா ஒரு டாக்டர், நர்ஸ், ஆய்வக வல்லுநர், மருத்துவ ஊழியர் உள்ளனர். தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை, சொட்டு மருந்து, காய்ச்சல், வாய், கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, மன நலம் உட்பட பல விதமான சிகிச்சைகள் கிடைக்கின்றன. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. ஏழை மக்களுக்கு நமது கிளினிக்குகள், மிகவும் உதவியாக உள்ளன.
சிவாஜிநகர், சாம்ராஜ்பேட், பத்மநாபநகர், பசவனகுடி, சிக்பேட்,ஜெயநகர், மஹாதேவபுரா, எலஹங்கா உட்பட பல்வேறு இடங்களில், பிரதான சாலைகளில் நமது கிளினிக்குகள் இல்லை. மாறாக ஏதோ ஒரு சிறிய சந்துகளில் கிளினிக்குகள் உள்ளன.
இத்தகைய கிளினிக் இருப்பதே, பலருக்கு தெரியாது. இதனால் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது இல்லை.
சில இடங்களில் உள்ள கிளினிக்களுக்கு, நோயாளிகள் அதிகம் வருகின்றனர். ஆனால் டாக்டர்கள் இருப்பது இல்லை. வாரத்தில் சில நாட்கள் மட்டுமே, வந்து செல்கின்றனர்.
வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், சிறார்களுக்கு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இது குறித்து, சரியாக பிரசாரம் செய்து மக்களுக்கு தெரிவிக்காததால், சிறார்களை சொட்டு மருந்து போட, பெற்றோர் அழைத்து வருவது இல்லை என, கிளினிக் ஊழியர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் மட்டும், நமது கிளினிக்களுக்கு வந்து மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர்.
வீடு வீடாக மாதந்தோறும் நிர்ணயித்த அளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நோயாளிகள் வருவது இல்லை. எனவே நமது கிளினிக் மருத்துவ ஊழியர்களே, வீடு வீடாக சென்று நோயாளிகளை அழைத்து வந்து, ரத்த அழுத்தம். நீரிழிவு பரிசோதனை செய்கின்றனர்.
தேவைபடுவோருக்கு மாத்திரைகள் அளிக்கின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பூங்காக்கள், கோவில்கள் உட்பட, பல்வேறு இடங்களுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை செய்து, மருந்துகள் கொடுக்கின்றனர். இதன் மூலம் இலக்கை எட்டுகின்றனர்.
சில கிளினிக்குகளில், அடிப்படை வசதிகள் இல்லை. பசவனகுடியில் உள்ள நமது கிளினிக் உட்பட சில இடங்களில் மின்சாரம் தடைபட்டால், இருளில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. யு.பி.எஸ்., வசதி இல்லை. எனவே இங்கு சிகிச்சைக்கு வர, நோயாளிகள் தயங்குகின்றனர்.
மாலை 4:30 மணிக்கு கிளினிக் மூடப்படுகிறது. கூலி தொழிலாளர்கள், நிறுவனங்களின் ஊழியர்களால் சிகிச்சை பெற முடிவது இல்லை என, வருந்துகின்றனர். கட்டாயத்தின் பேரில் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

