/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் ஆய்வகங்களுக்கு நோயாளிகள் பரிந்துரை
/
தனியார் ஆய்வகங்களுக்கு நோயாளிகள் பரிந்துரை
ADDED : ஆக 23, 2025 06:33 AM
பெங்களூரு: மாநில அரசின் மருத்துவமனைகள், தங்களிடம் உள்ள சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., உட்பட, மற்ற மருத்துவ உபகரணங்களை, சரியாக பயன்படுத்தாமல், தனியார் ஆய்வகங்களுக்கு எழுதிக் கொடுப்பதாக, சட்டசபை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் கமிட்டி அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
கமிட்டி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ண மூர்த்தி, சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஏழை நோயாளிகளின் நலனை மனதில் கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய் விலையுள்ள ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ., உட்பட, பல்வேறு மருத்துவ சாதனங்களை அரசு வாங்கியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டம், தாலுகா மருத்துவமனைகளில் பரிசோதனை வசதி உள்ளது.
ஆனால் அந்த மருத்துவமனைகள், தங்களிடம் உள்ள மருத்துவ பரிசோதனை சாதனங்களை பயன்படுத்தாமல், தனியார் ஆய்வகத்துக்கு செல்லும்படி, நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றன. இது போன்று மக்களுக்கு தொந்தரவு கொடுப்பது சரியல்ல.
பல்லாரியில் குழந்தை பெற்ற பெண்களின் இறப்புக்கு காரணமான மருந்தை சப்ளை செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, மருந்து தொடர்பான விசாரணை அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.
மருந்து தரம் குறித்த அறிக்கை எப்போது கிடைக்கும்? தாமதமாவதால் பிரச்னை ஏற்படாதா? அந்த மருந்து நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்துக்கு டெண்டர் அளித்திருக்கக் கூடாது.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், சிறுபான்மையினர் மாணவர் விடுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
உறைவிட பள்ளிகளின் மாணவர்களுக்கு, மொபைல் போனை பார்க்கும் நோய் ஒட்டியுள்ளது. எனவே அவர்களுக்கு கண் சிகிச்சைக்கு, அரசு வசதி செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, மாணவர்களுக்கு சரும நோய் வல்லுநர்கள் மூலமாக பரிசோதனை செய்ய வேண்டும். சரும பாதிப்பு இருந்தால், சிகிச்சை அளிக்க வேண்டும்.
உறைவிட பள்ளிகளில் படிக்கும், பல மாணவர்களுக்கு சிறுநீரக பிரச்னை உள்ளது. எனவே இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை, அல்ட்ரா ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, சரியாக கிடைப்பது இல்லை. இது தொடர்பாக, மாநிலம் முழுதும் புகார்கள் வருகின்றன. இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.