/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்ஷனை சந்திக்க பவித்ரா கவுடா முயற்சி
/
தர்ஷனை சந்திக்க பவித்ரா கவுடா முயற்சி
ADDED : டிச 21, 2025 05:17 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷனும், அவரது தோழி பவித்ரா கவுடாவும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷனை சந்திக்க வேண்டும் என, பவித்ரா கவுடா பரிதவிக்கிறார். ஆனால், அவரை சந்திக்க தர்ஷனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனுக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தார்.
கோபமடைந்த தர்ஷன், கடந்தாண்டு ஜூனில் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ரேணுகாசாமியை கடத்தி, ஷெட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து கொன்றார். உடலை கால்வாயில் வீசினர்.
கொலை வழக்கு தொடர்பாக, தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஒரே சிறையில் இருந்தாலும், தர்ஷன், பவித்ரா கவுடா நேரில் சந்திக்க அனுமதி அளிப்பது இல்லை.
சமீபத்தில் சிறைத்துறை டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்ற அலோக்குமார், பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்ய வந்திருந்தார். கைதிகளிடம் பேசினார். அதேபோன்று பவித்ரா கவுடாவிடமும் பேசினார்.
அப்போது அவர், தர்ஷனை சந்திக்க அனுமதியளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா என பார்ப்பதாக, டி.ஜி.பி., கூறியதாக தெரிகிறது.
சிறை அதிகாரிகளிடமும், அவ்வப்போது இதே கோரிக்கையை வைத்துள்ளார். ஆனால், பவித்ரா கவுடாவை சந்திப்பதில், தர்ஷனுக்கு விருப்பம் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

