ADDED : ஜன 27, 2026 04:50 AM

- நமது நிருபர் -:
பெங்களூரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம். எப்போதும் வாகனங்களின் ஹாரன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த நகரத்தில் எப்போதும் கேட்கும் சத்தத்தை போலவே, நகர வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஏதாவது சலசலப்பு இருக்கும். இதைப்போக்க ஒரு ஆன்மிக பயணம் செல்வது மிகவும் நல்லது. ஆன்மிக பயணம் என்றவுடன் காசி, அயோத்தி என நீண்ட துார பயணம் என நினைக்க வேண்டாம்.
பெரிய இடம் பெங்களூரு அருகே பன்னரகட்டா சாலையில் உள்ள ஷ்யாம் கோவிலுக்கு செல்லலாம். பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு அருகே ஸ்ரீ காட்டு ஷ்யாம் கோவில் அமைந்து உள்ளது.
இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமான ஷ்யாம் உள்ளார். இந்த கோவில் அமைந்துள்ள பகுதி அழகானது; அதே சமயம் அமைதியானது. பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவிலான இடம் உள்ளது.
இந்த கோவில் ராஜஸ்தானில் உள்ள பிரபலமான காட்டு ஷ்யாம் கோவிலின் மாதிரியாக கட்டப்பட்டு உள்ளது. வட இந்தியாவில் உள்ள கோவில்களை போலவே காட்சி அளிக்கும். இந்த கோவிலுக்கு பாரம்பரிய உடைகளில் வருவது அவசியம். கோவிலின் சில பகுதிகளில் படம் எடுக்க அனுமதி கிடையாது.
கோசாலை இந்த கோவிலின் வளாகத்தில், 'கோசாலை' உள்ளது. அங்கு திருமண நிகழ்ச்சிகள், பிற விழாக்கள் போன்றவை நடக்கின்றன. இங்கு மாலை நேரத்தில் காண்பிக்கப்படும் மங்களாரத்தியை தரிசனம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த கோவிலின் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம் போல என மனதிற்குள் தோன்றும்.
வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பவர்கள் மனம் உருகி வேண்டினால், வெற்றி பெறுவதற்கான சக்தி கிடைக்கும்.
இந்த கோவிலில், ராதா - கிருஷ்ணா, நவநீத கிருஷ்ணர், ராமர், சீதா தேவியுடன் - லட்சுமணன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு.
இங்கு பக்தர்கள் அமருவதற்கு பெரிய அளவிலான இடம் உள்ளது. வயதானவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளன. அவர்களுக்கு தனி வரிசை, நாற்காலி என தனி கவனிப்பு உள்ளது.
இங்கு பஜனைகளும் நடக்கும்.இக்கோவில் காலை 7:15 முதல் மதியம் 1:15 மணி வரையிலும், மாலை 4:15 முதல் இரவு 9:15 மணி வரையிலும் திறந்திருக்கும்.
10 நிமிடம் நடந்தால் கோவில்
பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பன்னரகட்டா உயிரியல் பூங்கா செல்லும் பஸ்சில் ஏற வேண்டும். பன்னரகட்டா பூங்கா நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 10 நிமிடம் நடந்தால் கோவிலை அடையலாம்.

