தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பறவை காய்ச்சலால் மயில்கள் இறப்பு துமகூரு மாவட்ட நிர்வாகம் 'அலெர்ட்'

 பறவை காய்ச்சலால் மயில்கள் இறப்பு துமகூரு மாவட்ட நிர்வாகம் 'அலெர்ட்'

 பறவை காய்ச்சலால் மயில்கள் இறப்பு துமகூரு மாவட்ட நிர்வாகம் 'அலெர்ட்'


ADDED : மே 02, 2026 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: துமகூரில் மயில்கள் உயிரிழப்புக்கு, பறவை காய்ச்சலுக்கான, 'ஹெச்5என்1' வைரஸ் காரணம் என்பது, தடயவியல் ஆய்வக அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இதனால், 10 கி.மீ., சுற்றுப்பகுதியில் உள்ள, 33 கிராமங்களை, மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தியுள்ளது.

துமகூரு புறநகரில், பொம்மனஹள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில், கடந்த மாதம், 11 நாட்களில், 44 மயில்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. யாராவது விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்றிருக்கலாம் அல்லது அதிகமான வெப்பத்தை தாங்க முடியாமல் உடல் சோர்வடைந்து இறந்திருக்கலாம் என, வனத்துறை அதிகாரிகள் சந்தேகித்தனர்.

அதேநேரத்தில், பறவை காய்ச்சலும் காரணமாக இருக்கலாம் என்றும் அஞ்சினர். அதனால், மயில்களின் உறுப்பு மாதிரிகளை சேகரித்து, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். தற்போது அறிக்கை வந்துள்ளது. மயில்களுக்கு பறவை காய்ச்சலை ஏற்படுத்தும், 'ஹெச்5என்1' வைரஸ் பாதித்து இருப்பது அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இது, பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயில்கள், ஹெச்5என்1 வைரஸ் பாதிப்பால் இறந்தது உறுதியானவுடன், கால்நடைத்துறை, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. 10 கி.மீ., எல்லைக்கு உட்பட்ட, 33 கிராமங்களில், 'ஹை அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, அவசரகால நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மயில்கள் இறந்த ஐந்து கிராமங்களுக்கு, தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும், தலா ஒரு பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி, இரண்டு கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு வனத்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பர்.

மயில்கள் இறந்த கிராமங்களின் சுற்றுப்பகுதியின், 10 கி.மீ., எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள், பதற்றமான பகுதி என, அறிவிக்கப்பட்டுள்ளன. 33 கிராமங்களும் கண்காணிக்கப்படுகின்றன. தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

சுற்றுப்புற கோழிப்பண்ணைகளில், நாட்டு கோழிகளின் ரத்த மாதிரியை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழிகளுக்கு தொற்று தென்பட்டால் சூழ்நிலை மோசமாகும். எனவே, கோழிப்பண்ணையில், அறிமுகமில்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிகள் இறந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி, பண்ணை உரிமையாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us