UPDATED : நவ 21, 2026 12:00 AM
ADDED : நவ 20, 2026 08:00 PM
பெங்களூரு: பெங்களூரின் பசவனகுடியில், கடலைக்காய் எனும் வேர்க்கடலை திருவிழா, டிசம்பர் 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடக்கவுள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், அறநிலையத்துறை இணைந்து ஆண்டுதோறும் கன்னட கார்த்திகை மாதம், கடைசி வாரம், பெங்களூரின் பசவனகுடியில், கடலைக்காய் திருவிழா நடத்துகின்றன.
இம்முறை டிசம்பர் 5ம் தேதி முதல், 8 வரை கடலைக்காய் திருவிழா நடக்க உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி, இம்முறையும் கடலைக்காய் திருவிழாவில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்படுகிறது.
திருவிழா நாட்களில் பசவனகுடி மற்றும் அதன் சுற்றுப்புற சாலைகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
நமது மாநிலத்தின் கோலார், சிக்கபல்லாபூர், சிந்தாமணி, சீனிவாசப்பூர், மாண்டியா, மாகடி, மைசூரு, குனிகல், துமகூரு மற்றும் தமிழகம், ஆந்திராவில் இருந்தும் பெருமளவில் கடலைக்காய் எனும் வேர்க்கடலை வரும்.
இங்கு, இனிப்பு கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் கடைகளும் இடம் பெறும்.
நடப்பாண்டு சரியான மழை இல்லாத காரணத்தால், கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களிலும் கடலைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே, இம்முறை கடலைக்காய் திருவிழாவில் கடலைக்காய் விலை சிறிது அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
