பீன்யா மேம்பாலம் 'லோடு டெஸ்ட்'டில் வெற்றி ஜூனில் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு
பீன்யா மேம்பாலம் 'லோடு டெஸ்ட்'டில் வெற்றி ஜூனில் வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பு
ADDED : மே 11, 2026 02:33 AM

பெங்களூரு: துமகூரு சாலையின், பீன்யா மேம்பாலம் வலுவாக உள்ளது. பலத்தில் பளு ஏற்படுத்தி நடத்திய, 'லோடு டெஸ்ட்'டில் தேர்ச்சி பெற்றுள்ளது. எனவே ஜூன் முதல் வாரத்தில் ஏழு நாட்களும், வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
பெங்களூரின், துமகூரு சாலையின், பீன்யா மேம்பாலம் பெங்களூரின் முக்கியமான மேம்பாலங்களில் ஒன்றாகும். ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பகுதியான பீன்யாவின், தேசிய நெடுஞ்சாலை - 4ல் வரும் மேம்பாலம் இதுவாகும். கர்நாடகாவின், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களுடன் இணைப்பு ஏற்படுத்துகிறது. 4.2 கி.மீ., தொலைவிலான இந்த மேம்பாலத்தின் இரண்டு கேபிள்கள், 2021ன் டிசம்பர் இறுதி வாரம் சாய்ந்ததால், பிரச்னை ஏற்பட்டது.
இதற்கு என்ன காரணம் என்பதை, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, இந்திய அறிவியல் ஆய்வகத்திடம், என்.ஹெச்.ஏ.ஐ., எனும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி, வல்லுநர்கள் குழுவினர் ஆய்வு செய்து, ஆய்வக அறிக்கை அளித்தனர். மேம்பாலத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்தால், கேபிள் சாய்ந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின், மேம்பாலத்தில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேம்பாலத்தில் கேபிள்களை சரி செய்யும் பணிகளின் டெண்டரை, மும்பையின் பிரசிநேட்நிறுவனத்திடம், என்.ஹெச்.ஏ.ஐ., ஒப்படைத்தது. சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிறுவனமும் கேபிள்களை மாற்றி, மேம்பாலத்தை பலப்படுத்தியது.
மேம்பாலம் கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு, தகுதி பெற்றுள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள, மே 5 முதல் லோடு டெஸ்டிங் நடத்தப்பட்டது. தலா, 30 டன் எடை கொண்ட ஆறு டிரக்குகள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மேம்பாலம் வலுவாக உள்ளது என்பது அதில் தெரிந்தது.
எனவே, ஜூன் மாதம் முதல், அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதியளிக்க, என்.ஹெச்.ஏ.ஐ., முடிவு செய்துள்ளது.
