ஓராண்டில் 44 கோடி பயணியர் வருகை பெங்., விமான நிலையம் புதிய சாதனை
ஓராண்டில் 44 கோடி பயணியர் வருகை பெங்., விமான நிலையம் புதிய சாதனை
ADDED : மே 17, 2026 12:17 AM

- நமது நிருபர் -:
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், 2025 - -26 நிதியாண்டில், 44 கோடி பயணியர் வந்து சென்றுள்ளனர். 5,32,000 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் அறிவித்து உள்ளது.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், 2025 - 26வது நிதியாண்டில் முக்கிய சாதனைகள், செயல்திறன் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டு முயற்சிகள் குறித்து ஆய்வு செய்ய, மாநில தலைமை செயலர் ஷாலினி தலைமையில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய லிமிடெட்டின் 134வது இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது.
அதிகரிப்பு இக்கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை:
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், 2025 - 26வது நிதியாண்டில், 44.47 கோடி பயணியரையும், 5,32,000 டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது. சர்வதேச பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு, நிலையான உள்நாட்டு தேவை, சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட உயர்வு ஆகியவையே காரணமாக கருதப்படுகிறது. 2025 - 26 நிதியாண்டில் பெங்களூரு வந்து, சென்ற பயணியர் எண்ணிக்கை 23.9 சதவீதம் அதிகரித்து உள்ளது. 72.3 லட்சம் பயணியர் கூடுதலாக வந்துள்ளதாக பதிவாகி உள்ளது.
உள்நாட்டு பயணியர் எண்ணிக்கை 3.3 சதவீதம் அதிகரித்ததன் மூலம் 37.24 லட்சம் பயணியர் என கணக்கிடப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஆண்டுதோறும், 6.2 சதவீதம் பயணியர் கூடுதலாக வந்து சென்றுள்ளனர்.
இந்த விமான நிலையத்தில், 78க்கும் மேற்பட்ட உள்நாட்டு சேவைகள், 34 சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து 2,80,800 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 4.5 சதவீதம் அதிகமாகும். தினமும் சராசரியாக 769 விமானங்கள் புறப்படுகின்றன.
இந்நிதியாண்டில், ஒரே நாளில், அதிகபட்சமாக 837 விமானங்கள் இயக்கப்பட்டது, விமான நிலையத்தின் சாதனையாகும். இதன் மூலம் ஒரே நாளில் 1,39,111 பயணியர் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர்.
இதுபோன்று பெங்களூரு விமான நிலையத்தில் சரக்கு வணிகம் சீரான வளர்ச்சியை கண்டுள்ளது. 5,32,000 டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.
சரக்கு வணிகம் அமெரிக்காவின் சிகாகோ, சிங்கப்பூர், லண்டன், ஜெர்மனியின் பிராங்க்பர்ட், சீனாவின் ஷென்சென், ஹாங்காங் உட்பட 38 இடங்களில் 15 சரக்கு விமான நிலையங்கள் மூலம், பெங்களூரு விமான நிலையம் இணைந்திருப்பதால், சரக்கு வணிகம் வளர்ச்சி பெற்று உள்ளது.
விவசாய பொருட்கள், மருந்து பொருட்கள், வாகனங்கள், உதிரி பாகங்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள், மின் வணிகம் என பலதரப்பட்ட பொருட்கள் கையாளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
