9 பேருடன் பாதியில் நின்ற 'லிப்ட்'டால் மக்கள் தவிப்பு
9 பேருடன் பாதியில் நின்ற 'லிப்ட்'டால் மக்கள் தவிப்பு
ADDED : மே 19, 2026 11:36 PM
ஷிவமொக்கா: ஷாப்பிங் மாலில், லிப்ட் திடீரென பழுதடைந்ததால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளே சிக்கிய ஒன்பது பேர், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஷிவமொக்கா நகரின், ஆல்கோலா சதுக்கத்தில், 'விஷால் மார்ட்' என்ற ஷாப்பிங் மால் உள்ளது. நேற்று முன் தினம் இரவு 8:30 மணிக்கு அந்த மாலுக்கு வந்திருந்த பொதுமக்கள், கட்டடத்தின் இரண்டாவது மாடியில், ஷாப்பிங் செய்தனர். அதன் பின் அங்கிருந்து கீழ் தளத்துக்கு செல்ல, லிப்டில் ஏறினர். அதில் ஒன்பது பேர் இருந்தனர்.
கீழே இறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லிப்ட் பாதியில் நின்றது. இதையறிந்த மால் ஊழியர்கள், லிப்ட் கதவை திறக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. லிப்டில் இருந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது லிப்டில் இருந்த ஒருவர், தன் மொபைல் போனில் அவசர எண் 112ல், தொடர்பு கொண்டு உதவி கோரினார்.
இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், வெட்டும் இயந்திரம் பயன்படுத்தி, லிப்ட் கதவை திறந்து அதில் சிக்கியவர்களை காப்பாற்றினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, லிப்டில் சிக்கிய ஒன்பது பேரும், பாதுகாப்பாக வெளியே வந்தனர்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும், ஷாப்பிங் மாலில் லிப்டை நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும் என, மால் நிர்வகிப்பாளர்களிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
