/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெல்லந்துார் ஏரியில் மீண்டும் நுரை துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
/
பெல்லந்துார் ஏரியில் மீண்டும் நுரை துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
பெல்லந்துார் ஏரியில் மீண்டும் நுரை துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
பெல்லந்துார் ஏரியில் மீண்டும் நுரை துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி
ADDED : மே 26, 2025 12:24 AM

பெங்களூரு : பெல்லந்துார் ஏரியில் மீண்டும் விஷத்தன்மை கொண்ட நுரை தென்படுகிறது. இதனால் அப்பகுதியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பெங்களூரின், பெல்லந்துார் ஏரி நகரின் பெரிய ஏரிகளில் ஒன்றாகும். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஏரியில் நுரை காணப்பட்டது. தீப்பிடித்து எரிந்து, பெரும் பீதியை கிளப்பியது. மக்களுக்கு ஆரோக்கிய பிரச்னையும் ஏற்பட்டது.
பெல்லந்துார் ஏரியில் ஏற்பட்ட நுரை மற்றும் தீ, தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர்.
இதை தீவிரமாக கருதிய தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏரியில் நுரை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; ஏரியை சீரமைக்க வேண்டும். நுரை பிரச்னைக்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.
வாரியமும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது. ஏரியின் சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீர், ஏரியில் கலப்பதால், நீர் அசுத்தமடையவும், நுரை பிரச்னைக்கும் காரணம் என, அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது.
தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்கும்படி, பெங்களூரு மாநகராட்சிக்கும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள், தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலக்காமல் நடவடிக்கை எடுத்தனர். நுரை பிரச்னை முடிவுக்கு வந்ததாக மக்கள் நிம்மதியாக இருந்தனர்.
பெங்களூரில் சில நாட்களாக, மழை பெய்து வரும் நிலையில், பெல்லந்துார் ஏரியில் மீண்டும் நுரை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சாலைக்கு பாய்ந்து வருகிறது. இது மக்களின் மீது படுவதால் சரும பிரச்னை ஏற்படுகிறது.
நுரையில் இருந்து எழும் துர்நாற்றம் காற்றில் கலக்கிறது. இதை சுவாசிப்பதால் மக்களின் ஆரோக்கியம் பாதிப்படைவதாக அப்பகுதியினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.